தண்டவாள பராமரிப்பு பணி: திண்டுக்கல்-மதுரை பயணிகள் ரெயில் ரத்து - பிற ரெயில்களின் வழித்தடங்களும் மாற்றம்


தண்டவாள பராமரிப்பு பணி: திண்டுக்கல்-மதுரை பயணிகள் ரெயில் ரத்து - பிற ரெயில்களின் வழித்தடங்களும் மாற்றம்
x
தினத்தந்தி 18 Oct 2019 4:00 AM IST (Updated: 18 Oct 2019 1:57 AM IST)
t-max-icont-min-icon

தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக திண்டுக்கல்-மதுரை பயணிகள் ரெயில் வருகிற 20, 21-ந்தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. பிற ரெயில்களின் வழித்தடங்களும் மாற்றப்பட்டுள்ளன.

திண்டுக்கல்,

திண்டுக்கல்-மதுரை, திண்டுக்கல்-திருச்சி ரெயில் வழித்தடங்களில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதையொட்டி திண்டுக்கல் வழியாக இயக்கப்படும் சில ரெயில்கள் பகுதியாகவும், சில ரெயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:-

திண்டுக்கல்லில் இருந்து மதுரைக்கு தினசரி இயக்கப்படும் பயணிகள் ரெயில் வருகிற 20, 21-ந்தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. நெல்லையில் இருந்து தாம்பரம் வரை இயக்கப்படும் ரெயில் 20-ந்தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இதேபோல் கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து திண்டுக்கல் வழியாக திருச்செந்தூர் வரை இயக்கப்படும் பயணிகள் ரெயில் வருகிற 21-ந்தேதி வரை பகுதியாக ரத்து செய்யப்பட்டு திண்டுக்கல் வரை இயக்கப்படும்.

அதேபோல் கோவையில் இருந்து நாகர்கோவில் வரை இயக்கப்படும் பயணிகள் ரெயிலும் 22-ந்தேதி வரை திண்டுக்கல்லுடன் நிறுத்தி வைக்கப்படும். விழுப்புரத்தில் இருந்து மதுரை வரை இயக்கப்படும் பயணிகள் ரெயில் வருகிற 22-ந்தேதி வரை பகுதியாக ரத்து செய்யப்பட்டு திருச்சி வரை இயக்கப்படும். மறுமார்க்கத்தில் மதுரையில் இருந்து விழுப்புரத்துக்கு இயக்கப்படும் பயணிகள் ரெயில் 21, 22-ந் தேதிகளில் மதுரை-திருச்சி இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். அந்த ரெயில் திருச்சியில் இருந்து விழுப்புரத்துக்கு இயக்கப்படும்.

கேரள மாநிலம் குருவாயூரில் இருந்து திண்டுக்கல் வழியாக சென்னைக்கு இயக்கப்படும் விரைவு ரெயிலின் வழித்தடம் மாற்றப்பட்டு 21, 22-ந்தேதிகளில் மதுரை, மானாமதுரை, திருச்சி வழியாக சென்னைக்கு இயக்கப்பட உள்ளது. திருப்பதியில் இருந்து திண்டுக்கல் வழியாக ராமேசுவரத்துக்கு இயக்கப்படும் விரைவு ரெயில் 20-ந்தேதி மட்டும் திருச்சி, காரைக்குடி, மானாமதுரை வழியாக ராமேசுவரத்துக்கு செல்லும். 21-ந்தேதி இதே வழித்தடத்தில் ராமேசுவரத்தில் இருந்து திருப்பதி செல்லும் விரைவு ரெயில் இயக்கப்படும்.

திருச்சியில் இருந்து திருவனந்தபுரம் வரை இயக்கப்படும் இன்டர்சிட்டி விரைவு ரெயில் 21, 22-ந்தேதிகளில் வழித்தடம் மாற்றப்பட்டு காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர் வழியாக திருவனந்தபுரம் செல்லும். நாகர்கோவில்-மும்பை விரைவு ரெயில் 21, 22-ந்தேதிகளிலும், மும்பை-நாகர்கோவில் விரைவு ரெயில் 21-ந்தேதியும் வழித்தடம் மாற்றப்பட்டு விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி, கரூர் வழியாக இயக்கப்படும். மும்பை தாதரில் இருந்து நெல்லை வரை இயக்கப்படும் விரைவு ரெயில் 21-ந்தேதி பகுதியாக ரத்து செய்யப்பட்டு திண்டுக்கல் வரை இயக்கப்படும்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து மதுரை வரை இயக்கப்படும் விரைவு ரெயில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) முதல் வருகிற 22-ந்தேதி வரை பகுதியாக ரத்து செய்யப்பட்டு திண்டுக்கல் வரை இயக்கப்படும். நெல்லை-மயிலாடுதுறை பயணிகள் ரெயில் 21, 22-ந்தேதிகளில் பகுதியாக ரத்து செய்யப்பட்டு திண்டுக்கல் வரை இயக்கப்படும். இதே தேதிகளில் ஈரோடு-நெல்லை பயணிகள் ரெயில் விருதுநகரில் இருந்து நெல்லைக்கு இயக்கப்படும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story