நாகர்கோவிலில் ரூ.6½ லட்சத்தில் நவீனப்படுத்தப்பட்ட நெசவாளர் கூட்டுறவு சங்கம்


நாகர்கோவிலில் ரூ.6½ லட்சத்தில் நவீனப்படுத்தப்பட்ட நெசவாளர் கூட்டுறவு சங்கம்
x
தினத்தந்தி 18 Oct 2019 4:15 AM IST (Updated: 18 Oct 2019 2:01 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் ரூ.6½ லட்சத்தில் நவீனப்படுத்தப்பட்ட நெசவாளர் கூட்டுறவு சங்கத்தை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திறந்து வைத்தார்.

நாகர்கோவில்,

நாகர்கோவில் வடசேரி பெரிய ராசிங்கன் தெருவில் உள்ள கைத்தறி நெசவாளர் தொடக்க கூட்டுறவு சங்கம் ரூ.6 லட்சத்து 68 ஆயிரத்தில் நவீனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கூட்டுறவு சங்கத்தை தமிழக அரசின் கைத்தறி துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நேற்று திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே, போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத், மாவட்ட செயலாளர்கள் எஸ்.ஏ.அசோகன் (கிழக்கு), ஜாண் தங்கம் (மேற்கு), முன்னாள் எம்.எல்.ஏ.ராஜன்,தோவாளை ஒன்றிய செயலாளர் கிருஷ்ணகுமார், கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க தலைவர் செல்வராஜ், மாவட்ட இணை செயலாளர் லதா ராமச்சந்திரன், துணை செயலாளர் பாக்கியலட்சுமி, இலக்கிய அணி தலைவர் சந்திரன் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

பேட்டி

பின்னர் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க. தொடங்கப்பட்டு 48 ஆண்டுகள் ஆகி விட்டாலும், கட்சியானது எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் கொள்கை மற்றும் கோட்பாட்டுடன் செயல்பட்டு வருகிறது. நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும். கருத்துக் கணிப்பில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என்று கூறியிருப்பது, கருத்து திணிப்பு ஆகும்.

தமிழகத்தில் 100 சதவீத கைத்தறி நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கைத்தறி துணிகள் தேக்கநிலை தற்போது இல்லை. கைத்தறி விற்பனை ஆண்டுக்கு ரூ.300 கோடியாக உயர்த்தப்படும். நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க பொய்யான வாக்குறுதிகளை அளித்தனர். இப்போது அவர்களால் எதுவும் சொல்லும் நிலையில் இல்லை.

சட்டப்படி நடவடிக்கை

சீமான் வாய்க்கு வந்தபடி பேசக்கூடியவர். முரட்டுத்தனமாக பேசி வருகிறார். ராஜீவ்காந்தி கொலை பற்றிய சர்ச்சைக்குரிய பேச்சு தொடர்பாக அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

அநாகரிக அரசியலுக்கு சொந்தக்காரர்கள் தி.மு.க.. தற்போது தமிழகத்தில் அநாகரிக அரசியல் நடப்பதாக அவர்கள் சொல்வது ஏற்கத்தக்கதாக இல்லை.

இவ்வாறு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறினார்.

முன்னதாக அ.தி.மு.க. தொடக்க விழாவையொட்டி வடசேரியில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு அமைச்சர் ஓ.எஸ் மணியன் தலைமையில் அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Next Story