மருதுபாண்டியர், தேவர் குருபூஜை விழா: அஞ்சலி செலுத்த வருபவர்கள் வருகிற 23-ந்தேதிக்குள் வாகன அனுமதி பெற வேண்டும் - கலெக்டர் தகவல்
மருதுபாண்டியர், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழாவிற்கு அஞ்சலி செலுத்த வருபவர்கள் 23-ந் தேதிக்குள் வாகன அனுமதி சீட்டு பெற வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை,
வருகிற 27-ந் தேதி காளையார்கோவிலில் மருதுபாண்டியர் குருபூஜை மற்றும் வருகிற 30-ந் தேதி பசும்பொன் முத்துராமலிங்கதேவரின் குருபூஜை விழா நடைபெறுகிறது. இதையொட்டி ஆலோசனை கூட்டம் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையிலும், போலீஸ் சூப்பிரண்டு ரோஹித்நாதன் முன்னிலையிலும் நடைபெற்றது.
கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:- மருதுபாண்டியர், பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழாவுக்கு நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வருபவர்கள் சொந்த வாகனங்களில் மட்டுமே வரவேண்டும். வாடகை வாகனங்கள் மற்றும் திறந்தவெளி வாகனங்கள் ஆகியவற்றில் வர அனுமதி இல்லை.
சொந்த வாகனங்களில் வரும் நபர்கள் வாகனங்கள் தொடர்பான விவரங்களை 23-ந் தேதிக்கு முன்பாக போலீஸ் நிலையத்தில் அளித்து வாகன அனுமதி சீட்டு பெற்று கொள்ள வேண்டும். வாகன அனுமதி சீட்டை வாகனத்தின் முன், பின்பகுதியின் கண்ணாடியின் உட்புறத்தில் தெளிவாக தெரியுமாறு ஒட்ட வேண்டும். வாகன அனுமதி சீட்டு இல்லாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை.
அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே சென்று வர வேண்டும். வாகனங்களின் மேற்கூரையிலோ அல்லது வாகனங்களின் படியிலோ தொங்கியவாறு பயணம் செய்யக்கூடாது. வாகனத்தில் ஒலிபெருக்கி பொருத்தக்கூடாது. வாகனங்களில் செல்வோர் சாதி, மத உணர்வுகளை தூண்டும் வகையிலான கோஷங்கள் எழுப்பக்கூடாது.
வாகனங்களில் ஆயுதங் கள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் ஏதும் எடுத்து செல்லக் கூடாது. வரும் வழித்தடங்களில் பட்டாசுகள் வெடிப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். மேலும், நடைபயணமாக சென்று அஞ்சலி செலுத்த அனுமதியில்லை. பிளக்ஸ் பேனர், கட்சி கொடிகள், ஒலிப்பெருக்கி ஆகியவற்றை பயன்படுத்தக்கூடாது. ஜோதி எடுத்து செல்லக்கூடாது. அரசு பஸ்களில் பயணம் செல்பவர்கள் முறையாக பயணச்சீட்டு பெற்று செல்ல வேண்டும்.
தகுதி செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மட்டும் சொந்த வாகனத்தில் அதிகப்பட்சமாக 3 வாகனங்களில் செல்ல அனுமதிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் மங்கலேஷ்வரன், முரளிதரன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் அப்துல்காதர், அண்ணாத்துரை, ஆனந்த், அருண், நாகராஜன், வருவாய் கோட்டாட்சியர்கள் செல்வகுமாரி, சங்கரநாராயணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராமபிரதீபன், மாவட்ட அரசு அலுவலர்கள், சமுதாய பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story