நாங்குநேரி இடைத்தேர்தலை ஒத்திவைக்க உத்தரவிடக்கோரி வேட்பாளர் வழக்கு - மதுரை ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை


நாங்குநேரி இடைத்தேர்தலை ஒத்திவைக்க உத்தரவிடக்கோரி வேட்பாளர் வழக்கு - மதுரை ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை
x
தினத்தந்தி 18 Oct 2019 4:15 AM IST (Updated: 18 Oct 2019 2:37 AM IST)
t-max-icont-min-icon

நாங்குநேரி இடைத்தேர்தலை ஒத்திவைக்க உத்தரவிடக்கோரி, மதுரை ஐகோர்ட்டில் வேட்பாளர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

மதுரை, 

தூத்துக்குடி மாவட்டம் சேரகுளத்தைச் சேர்ந்த சங்கரசுப்பிரமணியன், நாங்குநேரி இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். இவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நாங்குநேரி தொகுதியில் வருகிற 21-ந்தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. தற்போது இந்த தொகுதியில் அமைச்சர்கள், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் முகாமிட்டு உள்ளனர். இவர்கள் தங்களது கட்சி வேட்பாளருக்கு ஓட்டு போட வலியுறுத்தி அங்குள்ள வாக்காளர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்க முடிவு செய்துள்ளனர்.

இதனால் நாங்குநேரி தொகுதி முழுவதும் வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள் சுற்றித்திரிகின்றனர். இவர்கள் ஜனநாயகத்துக்கு விரோதமான செயலில் ஈடுபடுகின்றனர். இதனால் தொகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். அவர்களை தொகுதியில் இருந்து வெளியேற்ற தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே நாங்குநேரி இடைத்தேர்தல் தொடர்பான அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். இந்த தேர்தலை வேறொரு தேதிக்கு ஒத்திவைக்க உத்தரவிட வேண்டும்.

தற்போது தேர்தல் பணிகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையத்துக்கு தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

Next Story