சேலம் வந்த ரெயிலில் குழந்தையின் பிணத்தை போட்டு சென்றது யார்? போலீசார் விசாரணை


சேலம் வந்த ரெயிலில் குழந்தையின் பிணத்தை போட்டு சென்றது யார்? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 18 Oct 2019 3:45 AM IST (Updated: 18 Oct 2019 2:37 AM IST)
t-max-icont-min-icon

சேலம் ஜங்சன் வந்த ரெயிலில் குழந்தையின் பிணத்தை போட்டு சென்றது யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சூரமங்கலம், 

சேலம் ஜங்சன் ரெயில் நிலையம் வழியாக ஜோலார்பேட்டை-ஈரோடு பயணிகள் ரெயில் இயக்கப்படுகிறது. இந்தநிலையில் சம்பவத்தன்று இந்த ரெயில் சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்தில் உள்ள பிளாட்பாரம் எண் 3-ல் வந்து நின்றது. அப்போது ரெயிலில் உள்ள ஒரு பெட்டியின் இருக்கையின் அடியில் 2 வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை கிடந்தது.

இந்த குழந்தையின் அருகில் பெற்றோர் யாரும் இல்லை. இதையடுத்து ரெயில்வே போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து ரெயில்வே டாக்டரை கொண்டு பரிசோதனை செய்தனர். இதில் குழந்தை இறந்து இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து ரெயில்வே போலீசார் குழந்தையின் பிணத்தை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைத்தனர். இந்த குழந்தை வடமாநிலத்தை சேர்ந்த குழந்தையாக இருக்கலாம் என கருதப்படுகிறது. ஆனால் பெற்றோர் மற்றும் முகவரி தெரியவில்லை. குழந்தையின் வலது பக்க காது அருகே கருப்பு மச்சம் உள்ளது. இளஞ்சிவப்பு நிறத்தில் கையில்லா பனியன் அணிவிக்கப்பட்டு இருந்தது.

குழந்தையை யாராவது கொலை செய்தார்களா? அல்லது உடல் நலம் பாதிக்கப்பட்டு குழந்தை இறந்ததா? என்பது குறித்து பிரேத பரிசோதனை அறிக்கையின் முடிவில் தான் தெரியவரும். மேலும் குழந்தையின் பிணத்தை போட்டு சென்ற தம்பதி யார்? என்பது குறித்தும் தீவிரமாக விசாரணை நடத்தி வருவதாக ரெயில்வே போலீசார் தெரிவித்தனர்.

Next Story