வேலூர் அருகே, வங்கியில் மீண்டும் கொள்ளை முயற்சி - ரோந்து சென்ற போலீசாரால் நகை-பணம் தப்பியது
வேலூரை அடுத்த அரியூரில் வங்கியில் மீண்டும் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. அந்த நேரத்தில் போலீசார் ரோந்துசென்றதால் கொள்ளையர்கள் தப்பி ஓடிஉள்ளனர். இதனால் நகை- பணம் தப்பியது.
வேலூர்,
வேலூரை அடுத்த அரியூரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் உள்ளன. இந்த வங்கிகளில், இரவு ரோந்துசெல்லும் போலீசார் கையெழுத்திடும் புத்தகம் வைக்கப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் ரோந்து செல்லும் போலீசார் தினமும் அந்த புத்தகத்தில் கையெழுத்திடுவார்கள்.
அங்கு உள்ள ஒரு வங்கியில் நேற்று முன்தினம் மாலை பணி முடிந்ததும் அதிகாரிகளும், ஊழியர்களும் வங்கியை பூட்டிவிட்டு சென்றனர். நள்ளிரவு 1.30 மணியளவில் ரோந்துசென்ற போலீசார் அந்த வங்கியில் உள்ள புத்தகத்தில் கையெழுத்திட சென்றுள்ளனர்.
அப்போது வங்கி கிரில் கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கேட் திறந்திருந்தது. அதற்கு அடுத்துள்ள ஷட்டர் கதவின் 2 பூட்டுகளில் ஒரு பூட்டும் உடைக்கப்பட்டிருந்தது. மற்றொரு பூட்டை உடைக்க முயற்சி நடந்துள்ளது. இதைபார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகள் சென்றுபார்த்தனர். அப்போது வங்கியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவின் இணைப்பு துண்டிக்கப்பட்டு வேறுதிசையில் திருப்பிவைக்கப்பட்டிருந்தது.
கொள்ளையர்கள் பூட்டை உடைத்தநேரத்தில் போலீசார் வந்ததை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓடியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால் நகை- பணம் தப்பியது. வங்கியின் அருகில் உள்ள ஒரு வீட்டில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் கொள்ளையர்கள் நடமாட்டம் பதிவாகி இருக்கிறதா என்று பார்த்தபோது சம்பவம் நடந்த நேரத்தில் மின்சாரம் இல்லாமல் இருந்துள்ளது.
ஏற்கனவே இதேபகுதியில் உள்ள மற்றொரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கடந்த வாரம் கொள்ளைமுயற்சி நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்கும் முன்பு அதே பகுதியில் மற்றொரு கொள்ளை முயற்சி நடந்துள்ளது.
இதுகுறித்து அரியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story