நாமக்கல்லில் ரே‌‌ஷன்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


நாமக்கல்லில் ரே‌‌ஷன்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 17 Oct 2019 11:00 PM GMT (Updated: 17 Oct 2019 9:34 PM GMT)

நாமக்கல்லில் நேற்று 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரே‌‌ஷன்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல்,

பொது வினியோக திட்டத்திற்கு என தனித்துறை அமைக்க வேண்டும். கூட்டுறவுத்துறை ரே‌‌ஷன்கடை பணியாளர்களுக்கு நுகர்பொருள் வாணிப கழக ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாமக்கல் பூங்கா சாலையில் தமிழ்நாடு அரசு நியாயவிலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட துணை தலைவர் தண்டபாணி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மூர்த்தி வரவேற்று பேசினார். இதில் மாநில செயற்குழு உறுப்பினர் மனோகரன், துணை தலைவர் ராஜசேகர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சரவணன் உள்பட ரே‌‌ஷன்கடை பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌‌ஷங்கள் எழுப்பினர்.

பொட்டலமாக வழங்க வேண்டும்

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது அத்தியாவசிய பொருட்கள் அனைத்தையும் பொட்டலமாக வழங்க வேண்டும். பொது வினியோக திட்ட பணிகளை 100 சதவீதம் கணினி மயமாக்கிட வேண்டும். பணிவரன்முறை செய்யப்படாத பணியாளர்களை எவ்வித நிபந்தனையும் இன்றி பணிவரன்முறை செய்திட வேண்டும். கட்டுப்பாடற்ற பொருட்களை விற்பனை செய்ய நிர்பந்திக்க கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌‌ஷங்கள் எழுப்பினர்.

இதையொட்டி வேலைநிறுத்த போராட்டத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் மாற்று பணியாளர்கள் மூலம் ரே‌‌ஷன் கடைகளை திறக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்து இருந்ததால் ஒருசில கடைகள் மட்டுமே அடைக்கப்பட்டு இருந்தன.

Next Story