தமிழகத்தில் நல்லாட்சி தொடர இரட்டை இலை வெற்றி பெற வேண்டும் - சரத்குமார் பிரசாரம்


தமிழகத்தில் நல்லாட்சி தொடர இரட்டை இலை வெற்றி பெற வேண்டும் - சரத்குமார் பிரசாரம்
x
தினத்தந்தி 18 Oct 2019 4:30 AM IST (Updated: 18 Oct 2019 3:59 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் நல்லாட்சி தொடர நாங்குநேரி தொகுதியில் இரட்டை இலை வெற்றிபெற வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்தார்.

இட்டமொழி, 

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், நாங்குநேரி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனை ஆதரித்து 3 நாட்கள் சூறாவளி சுற்றுப்பயணத்தை நேற்று தொடங்கினார். அவர் நேற்று மாலை நாங்குநேரி ஒன்றியம் கருங்கண்மன் குடியிருப்பில் இருந்து தனது பிரசாரத்தை தொடங்கினார். கண்டிகைபேரி, இளையநயினார்குளம், ஏமன்குளம், மன்னார்புரம், இட்டமொழி, காரியாண்டி, செண்பகராமன்நல்லூர் மற்றும் மூலக்கரைப்பட்டி ஆகிய ஊர்களுக்கு சென்று பிரசாரம் செய்தார்.

அப்போது சரத்குமார் பேசுகையில் கூறியதாவது:-

நாங்குநேரி சட்டசபை இடைத்தேர்தல் எதற்கு வந்தது என்று உங்களுக்கு தெரியும். சட்டசபைக்கு உங்கள் சார்பில் உழைக்க செல்வேன் என்று கூறிவிட்டு, நாடாளுமன்றத்துக்கு செல்ல விரும்பி சென்று விட்டார். தற்போது இதே தொகுதியில் அதே காங்கிரஸ் கட்சி சார்பில் வெளியூரில் இருந்து ரூபி மனோகரனை வரவழைத்து நிறுத்தி இருக்கிறார்கள். நாங்குநேரி தொகுதி மக்களை புறக்கணித்த காங்கிரசை நீங்கள் விரட்டியடியுங்கள்.

ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த போது எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை செய்தார். அவரது வழியில் எடப்பாடி பழனிசாமியும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஓ.பன்னீர்செல்வம் கட்சியை கட்டுக்கோப்பாக நடத்தி வருகிறார். மாபெரும் தலைவி இறந்த பிறகு இரண்டு தலைவர்கள் கட்சியையும், ஆட்சியையும் சிறப்பாக நடத்தி வருகிறார்கள். நல்லாட்சி நடந்து வருகிறது.

காற்றையும் காசாக்கியது தி.மு.க., 2ஜி அலைக்கற்றையில் ரூ.1.76 லட்சம் கோடி ஊழல் செய்தது தி.மு.க. இயக்கம். எனவே ஸ்டாலின் சொல்வதை யாரும் கண்டு கொள்ளத் தேவையில்லை. உங்களுக்காக உழைக்க ரெட்டியார்பட்டி நாராயணனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச்செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பிரசாரத்தின் போது செய்தி துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, நாங்குநேரி ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் விஜயகுமார், துணை பொது செயலாளர் சுந்தர், நாங்குநேரி ஒன்றிய ச.ம.க. ஒன்றிய செயலாளர் சார்லஸ் ராஜா மற்றும் கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

இன்று (வெள்ளிக்கிழமை) களக்காடு ஒன்றியத்திலும், நாளை பாளையங்கோட்டை ஒன்றியத்திலும் சரத்குமார் பிரசாரம் செய்கிறார்.

முன்னதாக அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். அங்கு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில், தற்போது நடந்து கொண்டு இருக்கும் ஆட்சி பற்றியும், அதன் சிறப்பு பற்றியும் எடுத்துக்கூறி, அ.தி.மு.க. வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்கிறேன். நாங்குநேரி தொகுதியில் அ.தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. உள்ளாட்சி தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி தனித்து போட்டியா? என்பது குறித்து தேர்தல் அறிவித்த பிறகு முடிவு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story