தொடர் தோல்வியின்போதே ரங்கசாமி அரசியலை விட்டு விலகி இருக்கவேண்டும் - நாராயணசாமி கருத்து
தொடர் தோல்வி ஏற்பட்டபோதே ரங்கசாமி அரசியலை விட்டு விலகி இருக்கவேண்டும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
புதுச்சேரி,
புதுவை காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமாரை ஆதரித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி நாள்தோறும் வீடுவீடாக சென்று வாக்காளர்களை சந்தித்து வாக்குசேகரித்து வருகிறார். நேற்று அவர் ரெயின்போ நகர், சுதந்திர பொன்விழா நகரில் வாக்குசேகரித்தார்.
அப்போது மழை கொட்டியது. அதையும் பொருட்படுத்தாமல் குடை பிடித்தபடி தொடர்ந்து அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
வாக்குசேகரிப்பின்போது முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவை தேர்தல் பிரசாரத்தின்போது காங்கிரஸ் கட்சியைப்பற்றி நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தவறாக பேசியுள்ளார். ஏற்கனவே அவர் ராஜீவ்காந்தியைப்பற்றி விமர்சித்தது காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. சீமான் ஒரு தரம் தாழ்ந்த அரசியல்வாதி. அரசியல் கட்சி தலைவர்களை தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதை யாராலும் ஏற்க முடியாது.
அதற்காக அவருக்கு கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம். புதுவை வந்தபோதுகூட சீமானின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை. ராஜீவ்காந்தி கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார். அவர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
புதுவை எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி பிரசாரத்தின்போது கிரண்பெடியை குறைகூறியே நாங்கள் ஆட்சி நடத்துவதாக குற்றஞ்சாட்டியுள்ளார். எதிர்க்கட்சி தலைவரான அவர் சட்டமன்றத்துக்கு வருவதில்லை. மக்கள் பிரச்சினைகள் பற்றி பேசுவதில்லை.
தேர்தல் வரும்போது மட்டும் வருவார். தேர்தல் முடிந்ததும் வாட்ச் கடையில் உட்கார்ந்திருப்பார். நெல்லித்தோப்பு இடைத்தேர்தலிலும், நாடாளுமன்ற தேர்தலின்போதும் ஆட்சி மாற்றம் வரும் என்று பிரசாரம் செய்தார். அவர் கூறியதை மக்கள் ஏற்கவில்லை. தொடர்ந்து தோல்வியையே தழுவினார். அதோடு அவர் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கவேண்டும். தற்போது வேட்பாளர் கிடைக்காமல் ஒருவரை பிடித்து நிறுத்தி உள்ளார். இப்போதும் நாங்கள் வெற்றிபெற்றால் ஆட்சி மாற்றம் என்கிறார்.
மக்களுக்கு இலவச அரிசி வழங்கவும், சாலைபோடவும், பல்வேறு திட்டங்களை நிறைவேற்றவும் கவர்னர் கிரண்பெடி தடையாக உள்ளார். அவருக்கு ரங்கசாமி உறுதுணையாக உள்ளார். எங்கள் வேட்பாளர் வெற்றிபெறுவார்.
இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
Related Tags :
Next Story