கர்நாடகத்தில் சர்க்கரை உற்பத்தி குறையும் ; மந்திரி சி.டி.ரவி பேட்டி
கர்நாடகத்தில் ஏற்பட்ட மழை- வெள்ளத்தால் 1.52 லட்சம் எக்டேரில் கரும்பு சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது என்றும், இதனால் சர்க்கரை உற்பத்தி குறையும் என்றும் மந்திரி சி.டி.ரவி கூறினார்.
பெங்களூரு,
கர்நாடக சுற்றுலா மற்றும் சர்க்கரைத் துறை மந்திரி சி.டி.ரவி பெங்களூருவில் நேற்று கரும்பு விவசாயிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக்கு பிறகு அவர் நிருபர் களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நமது நாட்டில் ஆண்டுக்கு சர்க்கரை தேவை 20 மில்லியன் டன் ஆகும். ஆனால் சர்க்கரை உற்பத்தி 28 மில்லியன் டன். உலக அளவில் 300 மில்லியன் டன் சர்க்கரை தேவைப்படுகிறது. ஆனால் 270 மில்லியன் டன் சர்க்கரை மட்டுமே உற்பத்தியாகிறது. இதற்கு பிரேசில் நாடு, கரும்பு மூலம் அதிகளவில் எத்தனால் தயாரிப்பதே முக்கிய காரணம்.
இந்தியாவில் சர்க்கரை உற்பத்தியில் கர்நாடகம் 3-வது இடத்தில் உள்ளது. கர்நாடகத்தில் 85 சர்க்கரை ஆலைகள் உள்ளன. இதில் 67 ஆலைகள் செயல்படுகின்றன. கரும்புக்கு மத்திய அரசு ஆதரவு விலையை நிர்ணயம் செய்கிறது. இதன்படி 2018-19-ம் ஆண்டு கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகை 95.5 சதவீதம் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் ரூ.84 கோடி மட்டுமே பாக்கி உள்ளது.
ஆதரவு விலை இல்லாமல், சர்க்கரை ஆலை நிர்வாகத்திற்கும், விவசாயிகளுக்கும் இடையே வாய் வழியாக கூடுதல் தொகை ஒப்பந்தம் போட்டு கொள்கிறார்கள். இதற்கு அரசு பொறுப்பேற்காது. இனி வரும் காலங்களில் சர்க்கரை ஆலை நிர்வாகங்களும், விவசாயிகளும் கூடுதல் விலை தொடர்பாக சட்டப்படி ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளோம். அவ்வாறு ஒப்பந்தம் செய்து கொண்டால் மட்டுமே இந்த விஷயத்தில் அரசு தலையிட முடியும்.
சர்க்கரையின் தரத்தை அறிய ரூ.1 கோடி செலவில் சர்க்கரை ஆய்வு கருவியை வாங்க முடிவு செய்துள்ளோம். சர்க்கரை விலை குறையும் நேரத்தில் இழப்பை ஈடு செய்யும் வகையில் ஒரு நிதி தொகுப்பை உருவாக்க வேண்டும் என்று ஆலோசிக்கப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து பரிசீலித்து முடிவு எடுக்கப்படும். மாநில அரசின் சர்க்கரை துறையை பெலகாவி சுவர்ண சவுதாவுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த துறையில் ஊழியர்கள் பற்றாக்குறை நிலவுவதால் சில சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. கர்நாடகத்தில் 5 லட்சம் எக்டேர் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. இதில் இந்த ஆண்டு வட கர்நாடகத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் 1.52 லட்சம் எக்டேர் பரப்பளவில் கரும்பு சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நடப்பாண்டில் சர்க்கரை உற்பத்தி குறையும். கரும்பு பிழிதல் பணியை தீபாவளி பண்டிகைக்கு பிறகு தொடங்கும்படி சர்க்கரை ஆலைகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
சட்டசபை கூட்ட நிகழ்வுகளை படம் பிடிக்க காட்சி ஊடகங்களுக்கு சபாநாயகர் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். இதற்கும், மாநில அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை. சபாநாயகரின் அதிகாரத்தில் நாங்கள் தலையிட முடியாது. வேண்டுமானால் தனிப்பட்ட முறையில் சபாநாயகரிடம் பேசுகிறேன். இந்த விஷயத்தில் மாநில அரசு எதுவும் செய்ய முடியாது.
சபாநாயகரின் நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன. ஆனால் தனிப்பட்ட முறையில் அக்கட்சிகளின் தலைவர்கள் சிலர் பேசும்போது, சபாநாயகரின் நடவடிக்கை சரியானது தான் என்று கூறுகிறார்கள். அவர் கள் யார் என்பதை நேரம் வரும்போது சொல்கிறேன்.
இவ்வாறு சி.டி.ரவி கூறி னார்.
பேட்டியின்போது தொலைக்காட்சி ஊடகங் களுக்கு சபாநாயகர் விதித்துள்ள தடையை நீக்கும் வரை அரசு நிகழ்ச்சிகளை புறக்கணிப்பதாக கூறிவிட்டு, தொலைக்காட்சி ஊடக பத்திரிகையாளர்கள் வெளியேறினர்.
Related Tags :
Next Story