ஒர்லி தொகுதியில் போட்டியிடும் ஆதித்ய தாக்கரேக்கு நடிகர் சஞ்சய் தத் ஆதரவு
மராட்டிய சட்டசபை தேர்தலில் ஒர்லி தொகுதியில் ஆதித்ய தாக்கரே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என நடிகர் சஞ்சய் தத் ஆதரவு தெரிவித்து உள்ளார்.
மும்பை,
வருகிற 21-ந் தேதி நடைபெறும் மராட்டிய சட்டசபை தேர்தலில் பா.ஜனதா-சிவசேனா கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இதில் சிவசேனா சார்பில் மும்பை ஒர்லி தொகுதியில் யுவசேனா தலைவர் ஆதித்ய தாக்கரே போட்டியிடுகிறார். சிவசேனா தலைவர் உத்தவ்தாக்கரேயின் மூத்த மகனான இவர், தனது குடும்பத்தில் இருந்து முதல் முறையாக தேர்தல் களத்தில் இறங்கியுள்ளார். சிவசேனா நிறுவனரான பால் தாக்கரேவும், அவரது மகனான உத்தவ் தாக்கரேயும் இதுவரை தேர்தலில் போட்டியிட்டதில்லை.
இந்தநிலையில், இந்தி நடிகர் சஞ்சய் தத், ஒர்லி தொகுதியில் ஆதித்ய தாக்கரே வெற்றி பெறுவார் என டுவிட்டரில் பதிவிட்டார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
சிவசேனா நிறுவனர் பால் தாக்கரே எனக்கும், எனது குடும்பத்துக்கும் மிகவும் ஆதரவாக இருந்தார். நிறைய உதவிகள் செய்திருந்தார். நான் இதை என்றும் மறக்க மாட்டேன். அவர் எனக்கு அப்பா போன்றவர். உத்தவ் தாக்கரேயும் அதே போன்றே.
எனது இளைய தம்பியை போன்றவரான ஆதித்ய தாக்கரேக்கு வாழ்த்துகள். நம் நாட்டிற்கு ஆற்றல் மிக்க இளம் தலைவர்கள் தேவை. ஆதித்ய தாக்கரே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். எனது ஆதரவு அவருக்கே.
இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த 1993-ம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் சஞ்சய் தத் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு பால் தாக்கரே உறுதுணையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story