வேடசந்தூர் அருகே, சாமி சிலைகள் திருட்டை கண்டித்து பொதுமக்கள் மறியல்


வேடசந்தூர் அருகே, சாமி சிலைகள் திருட்டை கண்டித்து பொதுமக்கள் மறியல்
x
தினத்தந்தி 18 Oct 2019 10:30 PM GMT (Updated: 18 Oct 2019 1:52 PM GMT)

வேடசந்தூர் அருகே விநாயகர் சிலைகள் திருட்டை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வேடசந்தூர்,

வேடசந்தூர் அருகே உள்ள சாலையூர் நால்ரோட்டில் ஆதிதிராவிடர் காலனியில் விநாயகர் கோவில் உள்ளது. கடந்த 6–ந் தேதி மர்மநபர்கள் இந்த கோவிலுக்குள் புகுந்து விநாயகர் சிலையை திருடி சென்றனர். இதுகுறித்து கோவில் நிர்வாகம் சார்பாக வேடசந்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் அந்த கோவிலில் விநாயகர் சிலையுடன் இருந்த நாகதேவதை உள்ளிட்ட 2 சாமி சிலைகளை மர்மநபர்கள் திருடி சென்று விட்டனர். நேற்று காலை சாமி சிலைகள் திருட்டு போயிருப்பதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து சிலைகள் திருட்டு போனதை கண்டித்தும், அதனை மீட்டு தரக்கோரியும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சாலையூர் நால்ரோட்டில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வேடசந்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். திருட்டு போன சிலைகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். இதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story