50 தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க அனுமதி - வருவாய் அதிகாரி கவிதா தகவல்
ஈரோடு மாவட்டத்தில் 50 தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாக மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா கூறினார்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டத்தில் நிரந்தர பட்டாசு கடைகள் மற்றும் குடோன்கள் 161 செயல்பட்டு வருகிறது. இவற்றிற்கு தொடர்ந்து அனுமதி வழங்கப்பட்டு உள்ளன. தீபாவளி பண்டிகைக்காக தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க அனுமதிகோரி, ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:-
பல்வேறு விதிமுறைகள், பட்டாசு உற்பத்தி குறைவு போன்ற காரணத்தால் இந்த ஆண்டு தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க 124 பேர் மட்டுமே விண்ணப்பித்து உள்ளனர்.
இந்த விண்ணப்பங்கள் அனைத்தும் போலீஸ் துறை, தீயணைப்பு துறை, உள்ளாட்சி மற்றும் வருவாய் துறையினரின் தடையின்மை சான்று பெற்று வரப்பெற்றவை. இவை அனைத்தும் பரிசீலனையில் உள்ளன.
தீபாவளிக்கு முன்பாக ஒரு வாரத்துக்கு மட்டுமே தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க அனுமதி வழங்கப்படும். தற்போது பெறப்பட்ட 124 மனுக்கள் மீது பரிசீலனை செய்யப்பட்டு, அதில் 50 கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
மேலும் அனுமதி வழங்கப்பட்டு உள்ள கடைகளில் விற்கப்படும் பட்டாசுகள் விபரம், ஐகோர்ட்டு உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ள விதிகளின்படி இருக்க வேண்டும். சீன பட்டாசுகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதால் அவற்றை யாரேனும் விற்பனை செய்தால் சம்பந்தபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா கூறினார்.
Related Tags :
Next Story