கூத்தாநல்லூரில் இருதரப்பினரிடையே மோதல்; 3 பேர் படுகாயம் 6 பேர் கைது


கூத்தாநல்லூரில் இருதரப்பினரிடையே மோதல்; 3 பேர் படுகாயம் 6 பேர் கைது
x
தினத்தந்தி 19 Oct 2019 3:30 AM IST (Updated: 18 Oct 2019 10:44 PM IST)
t-max-icont-min-icon

கூத்தாநல்லூரில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். இதுதொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

கூத்தாநல்லூர்,

கூத்தாநல்லூர் அருகே உள்ள லெட்சுமாங்குடி மண்டபத்து கொல்லை தெருவை சேர்ந்தவர் ஜெகபர் சாதிக் (வயது 41). இவர் கூத்தாநல்லூர் மேலக்கடைத்தெருவில் ஓட்டல் நடத்தி வருகிறார். இந்தநிலையில் இவரது கடைக்கு சென்று மேல்கொண்டாழி தெருவை சேர்ந்த ராஜ்கிரண் (26), அவரது தம்பி மனோகர் (24) மற்றும் நண்பர்களும் சேர்ந்து டீ வடை சாப்பிட்டனர். இவர்களிடம் ஜெகபர்சாதிக் சாப்பிட்டதற்கும், பழைய பாக்கிக்கும் பணம் கேட்டதாக கூறப்படுகிறது.

அப்போது ராஜ்கிரணுக்கும், ஜெகபர்சாதிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கினர். இதில் படுகாயமடைந்த ஜெகபர்சாதிக் மன்னார்குடி அரசு மருத்துவமனையிலும், ராஜ்கிரண் மற்றும் அவரது தம்பி மனோகர் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து ஜெகபர்சாதிக் மற்றும் ராஜ்கிரண் கூத்தாநல்லூர் போலீசில் தனித்தனியே புகார் கொடுத்தனர். அதன்பேரில் ராஜ்கிரண், அவருடைய தம்பி மனோகர், நண்பர்கள் வினோத், இளமாறன், கார்த்தி, ஜெகபர்சாதிக், முகமதுஆசிக், முகமதுஅபுதாகீர், நைனாஸ்அகமது, மீராமைதீன், அகமத்துல்லா, அக்பர்அலி, ஜாகீர் உசேன் ஆகிய 13 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதில் வினோத் (24), இளமாறன் (26), கார்த்தி (23), முகமதுஅபுதாகீர் (28), முகமதுஆசிக் (27), நைனாஸ்அகமது (29) ஆகிய 6 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இந்தநிலையில் கைது செய்யப்பட்ட சிலரை விடுவிக்க வேண்டும் என்று கூறி ஒரு தரப்பினர் நேற்று லெட்சுமாங்குடி பாலத்தில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் கூத்தாநல்லூரில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story