ஆரோவில் சர்வதேச நகரில், மனைவி, 2 மகள்களை கொன்று தொழிலாளி தற்கொலை - பூட்டிய வீட்டுக்குள் பிணமாக கிடந்தனர்


ஆரோவில் சர்வதேச நகரில், மனைவி, 2 மகள்களை கொன்று தொழிலாளி தற்கொலை - பூட்டிய வீட்டுக்குள் பிணமாக கிடந்தனர்
x
தினத்தந்தி 18 Oct 2019 11:30 PM GMT (Updated: 18 Oct 2019 5:30 PM GMT)

ஆரோவில் சர்வதேச நகரில் மனைவி, மகள்களை விஷம் கொடுத்து கொன்ற தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர்கள் அனைவரும் பூட்டிய வீட்டுக்குள் பிணமாக கிடந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

வானூர்,

வானூர் தாலுகா ஆரோவில் அருகே குயிலாப்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகேசன் மகன் சுந்தரமூர்த்தி (வயது 40). இவருடைய மனைவி மகேஸ்வரி (35). இவர்கள் இருவரும் ஆரோவில் சர்வதேச நகரில் வேலைபார்த்து வந்தனர். இதனால் அங்குள்ள குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தனர். இவர்களது மூத்த மகள் கீர்த்திகா(17) அங்குள்ள பள்ளியில் 12-ம் வகுப்பும், இளையமகள் சமிக்‌ஷா 8-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

இந்தநிலையில் விழுப்புரத்தில் உள்ள உறவினர் ஒருவர் நேற்று முன்தினம் மாலை கணவன், மனைவி இருவரது செல்போனுக்கும் தொடர்பு கொண்டார். ஆனால் அவை ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு இருந்தது.

இதையடுத்து நேற்று காலை இவர்களது வீட்டுக்கு அந்த உறவினர் வந்தார். அப்போது வீட்டின் கதவு உள்புறமாக பூட்டப்பட்டு இருந்ததால் கதவை தட்டிப் பார்த்தார். பலமுறை கதவை தட்டியும் வீட்டுக்குள் இருந்து பதில் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்து அவர் ஜன்னல் கதவை திறந்து பார்த்தார். அப்போது வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து உடனடியாக ஆரோவில் போலீசுக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், ஆரோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மைக்கேல் இருதயராஜ், சப்-இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு போலீசார் உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது சுந்தரமூர்த்தி தூக்கில் பிணமாக தொங்கினார். வாயில் நுரை தள்ளியபடி மகேஸ்வரியும், 2 மகள்களும் கீழே பிணமாக கிடந்தனர். அழுகிய நிலையில் உடல்கள் கிடந்ததால் துர்நாற்றம் வீசியது. எனவே அவர்கள் இறந்து 2 நாட்களுக்கு மேல் ஆகி இருக்கும் என்று தெரிகிறது.

இதையடுத்து போலீசார் 4 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கனகசெட்டிகுளத்தில் உள்ள பிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் விசாரணையை தொடங்கினர்.

தொடர்ந்து போலீசார் அந்த அறை முழுவதும் சோதனை செய்தனர். தற்கொலைக்கு முன் சுந்தரமூர்த்தி ஏதாவது கடிதம் எழுதி வைத்துள்ளாரா? என்று தேடிப் பார்த்தனர். ஆனால் எதுவும் கிடைக்கவில்லை. சம்பவ இடத்துக்கு விழுப்புரத்தில் இருந்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ஆரோவில்லில் வேலைபார்த்துக் கொண்டே சுந்தரமூர்த்தி தீபாவளி பண்டு மற்றும் ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார். தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் பண்டு சேர்ந்தவர்களுக்கு பணம் மற்றும் பொருட்கள் கொடுக்க வேண்டியது இருந்தது. அந்த வகையில் வசூலித்த பணம் ரூ.30 லட்சம் வரை கடன் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் சீட்டு கட்டியவர்கள் சுந்தரமூர்த்தியிடம் பணத்தை கேட்டு வந்துள்ளனர். இதனால் கணவன்- மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த திங்கட்கிழமை சுந்தரமூர்த்தி குயிலாப்பாளையத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று அவர்களிடம் பேசி விட்டு வந்துள்ளார். அதன்பிறகு அவர்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை.

அவர்கள் வெளியூர் சென்று இருக்கலாம் என்று அக்கம்பக்கத்தினர் கருதினர். இந்தநிலையில் தான் சுந்தரமூர்த்தியும், மனைவி, மகள்களும் பிணமாக கிடந்தது தெரியவந்தது.

பூட்டிய வீட்டுக்குள் சுந்தரமூர்த்தி மட்டும் மின்விசிறியில் அவரது மனைவியின் சேலையில் தூக்குப்போட்டு பிணமாக தொங்கினார். அவரது மனைவி மகேஸ்வரி, மகள்கள் கீர்த்திகா, சமிக்‌ஷா ஆகியோர் வாயில் நுரை தள்ளியபடி பிணமாக கிடந்தனர்.

இது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதாவது குடும்பத்துடன் தற்கொலை செய்து இருந்தால் அனைவருமே விஷம் குடித்து இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் சுந்தரமூர்த்தி பிணமாக தூக்கில் தொங்கியதால் மனைவி, மகள்களுக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டு அதன்பிறகு அவர் தற்கொலை செய்து இருக்க வேண்டும் என்று போலீசார் கருதுகிறார்கள்.

ஆரோவில் சர்வதேச நகரில் பூட்டிய வீட்டுக்குள் குடும்பமே பிணமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story