தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு; பவானிசாகர் அணை நீர்மட்டம் 100 அடியை நெருங்குகிறது


தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு; பவானிசாகர் அணை நீர்மட்டம் 100 அடியை நெருங்குகிறது
x
தினத்தந்தி 19 Oct 2019 4:30 AM IST (Updated: 18 Oct 2019 11:04 PM IST)
t-max-icont-min-icon

தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பால் பவானிசாகர் அணை நீர்மட்டம் 100 அடியை ெநருங்குகிறது.

பவானிசாகர்,

பவானிசாகர் அணை தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணையாகும். அணையின் நீர்மட்டம் 105 அடியாக கணக்கிடப் படுகிறது. நீலகிரி மலைப்பகுதியே அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாகும். இங்கு பெய்யும் மழைநீர் பவானிசாகர் அணைக்கு வருகிறது. அணையில் இருந்து பவானி ஆற்றின் மூலம் தடப்பள்ளி-அரக்கன்கோட்டை, காலிங்கராயன் வாய்க்காலில் மற்றும் கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. மொத்தம் 2½ லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் இதன் மூலம் பாசன வசதி பெறுகிறது.

நேற்று முன்தினம் மாலை பவானிசாகர் அணைக்கு 6 ஆயிரத்து 749 கனஅடி தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்டம் 97.16 அடியாக இருந்தது.

இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக நீலகிரி மலைப்பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் கோவை மாவட்டத்தில் உள்ள பில்லூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டியது. அதைத்தொடர்ந்து பில்லூர் அணையில் இருந்து பவானிசாகர் அணைக்கு உபரிநீர் திறந்து விடப்பட்டது.

இதன் காரணமாக அணைக்கு நேற்று காலை 8 மணி அளவில் 6 ஆயிரத்து 422 கனஅடி தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்டமும் உயர்ந்து 97.56 அடியை தொட்டது. தொடர்ந்து அணைக்கு வரும் நீர்வரத்து மளமளவென அதிகரித்தது.

காலை 10 மணி அளவில் 10 ஆயிரத்து 121 கனஅடி தண்ணீர் வந்தது. இது மதியம் 12 மணி அளவில் 18 ஆயிரத்து 611 கனஅடியாகவும், 2 மணி அளவில் 22 ஆயிரத்து 333 கனஅடியாகவும் அதிகரித்தது. இதனால் நீர்மட்டம் 98.06 அடியை எட்டியது. அணையில் இருந்து கீ்ழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 1,500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு, மழை காரணமாக பவானிசாகர் அணை விரைவில் 100 அடியை நெருங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாதம் 30-ந் தேதி வரை அணையில் 102 அடி வரை தண்ணீரை இருப்பு வைக்கலாம் என்று பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர். எனவே பவானிசாகர் அணை 102 அடியை தாண்டினால் உபரிநீர் திறந்துவிடப்படும்.

Next Story