கோவையில், இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான ரூ.45 கோடி நிலம் மீட்பு
கோவையில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான ரூ.45 கோடி நிலம் மீட்கப்பட்டு உள்ளது.
கோவை,
கோவை சவுரிபாளையத்தில் சக்தி மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான 3.42 ஏக்கர் நிலம் உள்ளது. இதை 9 பேர் குத்தகை அடிப்படையில் பெற்று தனியார் நிறுவனங்களை நடத்தி வந்தனர். இந்த நிலையில் அந்த நிலத்தை அறநிலையத்துறை யிடம் திரும்ப ஒப்படைக்கும்படி சம்பந்தப்பட்டவர்களிடம் அதிகாரிகள் வலியுறுத்தினர்.
ஆனால் குத்தகைதாரர்கள், தங்களை அந்த நிலத்தில் இருந்து வெளியேற்ற தடை விதிக்க கோரி கோவை சப்-கோர்ட்டில் கடந்த 2013-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்த னர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, 4 பேரின் மனுக்களை கடந்த 9.8.2018 அன்று தள்ளுபடி செய்தார். அதைத் தொடர்ந்து வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் 9-ந் தேதி மீதம் உள்ள மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இது தொடர்பாக குத்தகைதாரர்கள் கோவை இந்து அறநிலைய துறை இணை ஆணையர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அதை விசாரித்த இணை ஆணையர் கடந்த 20.8.19 அன்று மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் சம்பந்தப்பட்ட நிலத்தை இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கையகப்படுத்தவும் உத்தரவிட்டார்.
இதையடுத்து கோவை மாவட்ட இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் விமலா தலைமையில் அதிகாரிகள் பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் அந்த நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றினர்.
இதுகுறித்து உதவி ஆணையர் விமலா கூறியதாவது:-
சக்தி மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான ரூ.80 கோடி மதிப்பிலான 3.42 ஏக்கர் நிலம் குத்தகைதாரர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பாக 9 பேர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதில் அவர்கள் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. அவர்களிடம் இருந்து ரூ.45 கோடி மதிப்பிலான 2 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான இடம் என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது. மீதம் உள்ள 1.42 ஏக்கர் நிலம் தொடர்பாக குத்தகைதாரர்கள் மேல்முறையீடு செய்து உள்ளதால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story