கோவை, நீலகிரி மாவட்டங்களில் மழை: வெள்ளத்தில் தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது


கோவை, நீலகிரி மாவட்டங்களில் மழை: வெள்ளத்தில் தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது
x
தினத்தந்தி 19 Oct 2019 4:30 AM IST (Updated: 19 Oct 2019 12:20 AM IST)
t-max-icont-min-icon

கோவை, நீலகிரி மாவட்டங்களில் பெய்த பலத்த மழை காரணமாக வெள்ளத்தில் தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது.குன்னூரில் மண் சரிவு ஏற்பட்டது.

கோவை,

கோவை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் பலத்த மழை பெய்து வருகிறது. கோவை காந்திபுரம், சிங்காநல்லூர், உக்கடம், டவுன்ஹால், ராமநாதபுரம், ஆர்.எஸ்.புரம் உட்பட மாநகரம் மற்றும் புறநகர் பகுதியில் நேற்றுமுன்தினம் தொடர்ந்து மழை பெய்தது.

மழை காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் ஓடியது. இதனால் ஆத்துப்பாலம் அருகே சுண்ணாம்பு காளவாய் பகுதியில் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். கோவை வ.உ.சி. பூங்கா அருகே உள்ள மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் மாணவர்கள் விளையாட முடியாமல் தவித்தனர். பெரியநாயக்கன் பாளையம், இடிகரை, கவுண்டம்பாளையம், வீரபாண்டி, நரசிம்மநாயக்கன்பாளை யம், கோவனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் கனமழை கொட்டியது.

மதுக்கரை அருகே வாளையார் ஆற்றுக்கு செல்லும் குமிட்டிபதி தரைப்பாலம் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இது போல் காக்காசாவடி, வீரப்பனூர் செல்லும் சாலை துண்டிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

தொடர் மழை காரணமாக கோவை ஒப்பணக்கார வீதி, கிராஸ்கட் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் கோவை அரசு ஆஸ்பத்திரி முன் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு உள்பட பல்வேறு நோய்கள் பரவும் வாய்ப்புள்ளது.

பேரூர், தொண்டா முத்தூர், ஆலாந்துறை சுற்றுவட்டார கிராமங்களில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் நீண்ட நாட்களுக்கு பிறகு நொய்யல் ஆற்றின் முதல் தடுப்பணையான சித்திரைச்சாவடி அணைக்கட்டு நேற்று நிரம்பி வழிந்தது.

வனப்பகுதியில் பெய்த பலத்த மழையால் கோவை குற்றாலம் அருவியில் நேற்று காலை முதல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்ல வனத்துறையினர் நேற்று முதல் தடை விதித்தனர். இதன் காரணமாக நேற்று அங்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். பேரூர் பகுதிகளில் உள்ள குட்டை மற்றும் ஏரிகள் நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு (மி.மீ.) வருமாறு:-

அன்னூர்-4., விமான நிலையம்-6.2., மேட்டுப்பாளையம்-31.2., சின்கோனா-2., வால்பாறை பி.ஏ.பி-6., வால்பாறை தாலுகா-5., சோலையார்-24., ஆழியாறு-17.4., பொள்ளாச்சி-75., கோவை தெற்கு-27., பெரியநாயக்கன்பாளையம்-6, வேளாண்மை பல்கலைக்கழகம்-59.

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, குந்தா உள்ளிட்ட பகுதிகளில் தீவிரமாக மழை பெய்து வருகிறது. நேற்று ஊட்டி-குன்னூர் தேசிய நெடுஞ்சாலை வேலிவியூ பகுதியில் சாலை அகலப்படுத்தப்பட்ட இடத்தில் மண்சரிவு ஏற்பட்டது. உடனே பொக்லைன் எந்திரம் மூலம் சாலையில் கிடந்த மண் அள்ளி அகற்றப்பட்டது. ஊட்டி-குன்னூர் சாலையில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ரெயில் தண்டவாளத்தில் பாறைகள் உருண்டும், மரங்கள் முறிந்தும் விழுந்தன. குந்தா தாலுகாவில் மண்சரிவு, பாறைகள் உருண்டு விழுவது போன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டு வருகின்றன. எனவே நேற்று குந்தா தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டார். நீலகிரியில் அபாயகரமான இடங்கள் என கண்டறியப்பட்ட 283 பகுதிகளில் காவல்துறை, தீயணைப்புத்துறை, நெடுஞ்சாலைத்துறை, வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

குன்னூர் ஊட்டி தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் கோபாலபுரம் வெடி மருந்து தொழிற்சாலை தொழிலாளர் குடியிருப்பு முதல் நற்செய்தி நிலையம் வரை மரங்கள் உள்ளன. இந்த மரங்கள் காற்று மற்றும் பருவமழை காலங்களில் குன்னூர்- ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் விழுந்து போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்தி வருவது தொடர் கதையாகி வருகிறது.

தற்போது நீலகிரி மற்றும் குன்னூர் பகுதியில் வடகிழக்கு பருவ மழை தீவிரமாக பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை கனமழை பெய்தது. இதனால் நேற்று காலை 6.30 மணிக்கு அருவங்காடு தபால் நிலையம் அருகே ராட்சத மரம் ஒன்று வேரோடு சாய்ந்து குன்னூர்- ஊட்டி தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதை அறிந்த வெடிமருந்து தொழிற்சாலை தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து மரத்தை வெட்டி அகற்றினர். இதனால் 2 மணி நேரத்திற்கு பிறகு போக்குவரத்து தொடங்கியது. நேற்று காலை 11 மணிக்கு கோபாலபுரம் வெடிமருந்து தொழிற்சாலை தொழிலாளர் குடியிருப்பு வளாகத்தில் இருந்த ராட்சத மரம் வேரோடு சாய்ந்து சாலையின் குறுக்கே முறிந்து விழுந்தது. இதை அறிந்த குன்னூர் தீயணைப்பு நிலைய அலுவலர் மோகன் தலைமையில் தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று மரத்தை வெட்டி அகற்றினர்.

மஞ்சூர் பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்தது. இதில் சேரனூர் அருகில் டிரான்ஸ்பார்மரில் மரம் விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. கிண்ணக்கொரை - மஞ்சூர் சாலை, எடக்காடு -மஞ்சூர் பிரதான சாலையான முக்கிமலை காம்போடு பகுதியில் மண்சரிந்து சாலையில் விழுந்தது. இதனால் காலை நேரத்தில் எடக்காட்டில் இருந்து கோவை, மேட்டுப்பாளையம், ஆவின் வேன் மற்றும் தனியார் வாகனங்கள் சாலையின் இருபுறமும் அணிவகுத்து நின்றன.

மஞ்சூர் - ஊட்டி பிரதான சாலையில் குந்தா பாலம் - மெரிலேண்ட் வரை 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த சாலையில் செல்ல முடியாமல் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இது போல் தொட்டக்கம்பை - பிக்கட்டி பிரதான சாலையான கெரப்பாடு அருகில் மண் சரிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story