கோபி அருகே பரிதாபம்: மின்சாரம் தாக்கி பாலிடெக்னிக் மாணவர் சாவு


கோபி அருகே பரிதாபம்: மின்சாரம் தாக்கி பாலிடெக்னிக் மாணவர் சாவு
x
தினத்தந்தி 19 Oct 2019 4:45 AM IST (Updated: 19 Oct 2019 12:48 AM IST)
t-max-icont-min-icon

கோபி அருகே மின்சாரம் தாக்கி பாலிடெக்னிக் மாணவர் ஒருவர் பரிதாபமாக இறந்தார்.

கடத்தூர்,

ஈரோடு மாவட்டம் கோபி நாய்க்கன்காடு பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவருடைய மகன் பாஸ்கர் (வயது 18). அந்த பகுதியில் செயல்படும் ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் என்ஜினீயரிங் 3-ம் ஆண்டு படித்து வந்தார். விடுமுறை நாட்கள் மற்றும் மாலை நேரங்களில் வீடுகளுக்கு எலெக்ட்ரிக்கல் வேலையும் செய்து வந்தார்.

கோபி லக்கம்பட்டி ஈஸ்வரமூர்த்தி நகரில் செந்தில்குமார் என்பவர் புதுவீடு கட்டி வருகிறார். இந்த வீட்டுக்கான எலெக்ட்ரிக்கல் வேலைகளையும் பாஸ்கர்தான் செய்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று மாலை 4½ மணி அளவில் செந்திலின் வீட்டில் பாஸ்கர் வேலை பார்த்துக்கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியது. உடனே அருகே இருந்தவர்கள் பாஸ்கரை மீட்டு ஆம்புலன்சில் கோபியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்கள். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் இறந்துவிட்டார்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும், கோபி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்கள். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு இருந்த பாஸ்கரின் உடலை பார்த்து அவருடைய பெற்றோர்கள் கதறி துடித்தது பார்க்க பரிதாபமாக இருந்தது.

Next Story