சின்னாளபட்டி அருகே, கோவில் உண்டியலை துளையிட்டு பணம் திருட்டு, 3-வது முறையாக மர்ம நபர்கள் கைவரிசை


சின்னாளபட்டி அருகே, கோவில் உண்டியலை துளையிட்டு பணம் திருட்டு, 3-வது முறையாக மர்ம நபர்கள் கைவரிசை
x
தினத்தந்தி 18 Oct 2019 10:45 PM GMT (Updated: 18 Oct 2019 7:22 PM GMT)

சின்னாளபட்டி அருகே கோவில் உண்டியலை துளையிட்டு பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

சின்னாளபட்டி,

சின்னாளபட்டி அருகே திண்டுக்கல்-மதுரை 4 வழிச்சாலை அம்பாத்துரை பிரிவில் பிரசித்தி பெற்ற வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவில் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இருக் கிறது. இங்கு ஒவ்வொரு சனிக் கிழமையும் ஏராளமான பக்தர்கள் வந்து ஆஞ்சநேயரை வழிப்பட்டு செல்கின்றனர்.

கடந்த புரட்டாசி மாதத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் அதிகம் பேர் வந்து சாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில் நேற்று காலையில் கோவில் பூசாரி சேதுராமன் கோவிலை திறந்து உள்ளே சென்றார். அங்கு மேற்கூரையின் ஓடு பிரிக்கப்பட்டு இருந்தது. கோவில் கருவறைக்கு முன்பு வைக்கப்பட்டிருந்த உண்டியலை துளையிட்டு, பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றிருப்பதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சின்னாளபட்டி போலீசில் கோவில் செயல் அலுவலர் சுகன்யா புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கோவிலுக்கு இரவு காவலர்கள் இல்லை. இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நேற்று முன்தினம் இரவு கோவில் மேற்கூரை ஓடுகளை பிரித்து உள்ளே இறங்கியுள்ளனர். பின்னர் உண்டியலை எடுத்து செல்ல முயன்றுள்ளனர். ஆனால் முடியாததால், அதன் பக்கவாட்டில் துளையிட்டு பணத்தை திருடி சென்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தடயவியல் நிபுணர்கள் அங்கு வந்து பதிவான தடயங்களை சேகரித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து உண்டியலில் பணத்தை திருடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த கோவிலில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு உண்டியலின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை திருடி சென்றனர். அதன்பின்னர் கடந்த ஆண்டு கோவில் உண்டியலை எடுத்து சென்று வத்தலக்குண்டு சாலையோரத்தில் வைத்து பூட்டை உடைத்து பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர். தற்போது 3-வது முறையாக அதே கோவிலில் திருட்டு சம்பவம் நடந்துள்ளது அப்பகுதி பொதுமக்களிடம் பீதியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story