திருத்தணி மோட்டார் வாகன அலுவலகத்தில் மோசடி; 3 பேர் கைது போலி ஓட்டுனர் உரிமம் வழங்கியது அம்பலம்


திருத்தணி மோட்டார் வாகன அலுவலகத்தில் மோசடி; 3 பேர் கைது போலி ஓட்டுனர் உரிமம் வழங்கியது அம்பலம்
x
தினத்தந்தி 19 Oct 2019 4:15 AM IST (Updated: 19 Oct 2019 1:01 AM IST)
t-max-icont-min-icon

திருத்தணி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு போலியான ஓட்டுனர் உரிமம் வழங்கி மோசடியில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலராக ஜெயபாஸ்கரன் உள்ளார். இவரது கட்டுப்பாட்டில் திருத்தணி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் உள்ளது. இங்கு திருத்தணி, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு பகுதிகளில் உள்ள வாகன ஓட்டிகளுக்கு ஓட்டுனர் உரிமம் வழங்குதல், உரிமம் புதுப்பித்தல், வாகனங்களை பதிவுசெய்தல், தகுதி சான்றிதழ் வழங்குதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் திருத்தணி வாகன போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகத்தில் தனியார் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வந்தவர் திருத்தணி செந்தமிழ் நகரை சேர்ந்த ராஜா என்ற ராபர்ட் (வயது 24). இவர் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் உள்ள பயனாளர் பாஸ்வேர்டை தெரிந்து கொண்டு, அதன் மூலம் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் மற்றும் தகுதியற்ற பலருக்கு போலி ஓட்டுனர் உரிமம் வழங்கியும், போலி ஆவணங்களை தயாரித்து மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதுகுறித்து வட்டார போக்குவரத்து அலுவலரான ஜெயபாஸ்கரன் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தனிடம் புகார் அளித்தார். அவரது உத்தரவின்பேரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணப்பன், இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதைத்தொடர்ந்து நேற்று திருத்தணி அருகே தலைமறைவாக இருந்த ராபர்ட் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது கூட்டாளிகளான திருவண்ணாமலை மாவட்டம் கீழ்அணைக்கரை தாளவேடு கணேசபுரத்தை சேர்ந்த விஷ்ணு (25), சக்திவேல்(25) ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்களை திருத்தணி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

Next Story