தீபாவளியையொட்டி மதுரையில் நள்ளிரவு 2 மணி வரை கடை நடத்தலாம் - ஐகோர்ட்டு அனுமதி


தீபாவளியையொட்டி மதுரையில் நள்ளிரவு 2 மணி வரை கடை நடத்தலாம் - ஐகோர்ட்டு அனுமதி
x
தினத்தந்தி 19 Oct 2019 3:45 AM IST (Updated: 19 Oct 2019 1:04 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் தீபாவளியையொட்டி நள்ளிரவு 2 மணிவரை கடைகள் நடத்த ஐகோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.

மதுரை,

மதுரை டெக்ஸ்டைல்ஸ் விற்பனையாளர் கூட்டமைப்பின் செயலாளர் அஷ்ரப்யூசுப், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

வருகிற 27-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி ஏராளமான வியாபாரிகள் கடன் வாங்கி, தங்களது வியாபாரத்தில் முதலீடு செய்துள்ளனர். தீபாவளிக்கு முந்தைய 2 நாட்கள் வெள்ளி மற்றும் சனிக் கிழமை என்பதால் கூலித்தொழிலாளர்கள், பிற மாவட்டங்களில் வேலை செய்பவர்கள் அந்த நாட்களில் மதுரைக்கு வந்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்வார்கள்.

எனவே வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு வருகிற 25, 26-ந்தேதிகளில் இரவு முழுவதும் கடைகளை திறந்து வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று போலீசாரிடம் மனு அளித்தோம். இதுவரை பதில் அளிக்கவில்லை. எனவே தீபாவளிக்கு முந்தைய இரு நாட்களும் மதுரையில் இரவு முழுவதும் கடைகளை நடத்த அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி கோவிந்தராஜ் முன்பு விசாரணைக்கு வந்தது.

முடிவில், “கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் நள்ளிரவு 2 மணி வரை கடை நடத்திக்கொள்ளலாம்.

அதே சமயம், அரசாணையில் குறிப்பிட்டுள்ள பாதுகாப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை முறையாக பின்பற்ற வேண்டும்“ என உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.

Next Story