ராமேசுவரம்-தனுஷ்கோடி இடையேயான ரெயில் பாதைக்கு மண் ஆய்வு தொடங்கியது


ராமேசுவரம்-தனுஷ்கோடி இடையேயான ரெயில் பாதைக்கு மண் ஆய்வு தொடங்கியது
x
தினத்தந்தி 18 Oct 2019 10:00 PM GMT (Updated: 18 Oct 2019 7:36 PM GMT)

ராமேசுவரம்- தனுஷ்கோடி இடையே புதிததாக அமைக்கப்படும் ரெயில் பாதைக்கு மண் ஆய்வுப் பணி தொடங்கியது.

ராமேசுவரம்,

ராமேசுவரத்தில் இருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தனுஷ்கோடியானது, 1964-ம் ஆண்டுக்கு முன்பு வரையிலும் தொழில் நகரமாக விளங்கியது.

1964-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட புயல் காரணமாக அந்த நகரம் முழுமையாக அழிந்து போனது. புயல் பாதிப்பில் தனுஷ்கோடி வரையிலான ரெயில் பாதையும் கடல் நீரில் அடித்துச் செல்லப்பட்டது.

எனவே தனுஷ்கோடி வரை மீண்டும் ரெயில்பாதை அமைக்க தற்போது மத்திய அரசு ஒப்புதல் வழங்கி அதற்காக சுமார் ரூ.208 கோடியும் ஒதுக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக ராமேசுவரத்தில் இருந்து தனுஷ்கோடி வரை மீண்டும் ரெயில் பாதை அமைப்பது குறித்து 2 கட்ட ஆய்வு முடிந்து விட்டது.

இந்த நிலையில் தனுஷ்கோடி வரை மீண்டும் ரெயில்பாதை அமைக்க மண் ஆய்வுப்பணி நேற்று முதல் தொடங்கி உள்ளது. தனுஷ்கோடி கம்பிபாடு கடற்கரையில் இருந்து ஒரே நேரத்தில் 2 இடங்களில் மண்ணில் எந்திரம் மூலம் 15 மீட்டர் ஆழம் வரை துளை போட்டு, அதில் இருந்து மண் சேகரிக்கப்பட்டு வருகிறது. இந்த பணியில் சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனத்தை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர்.

இது பற்றி ரெயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், “தனுஷ்கோடியில் இருந்து ராமேசுவரம் வரை 26 இடங்களில் மண் ஆய்வு பணி நடைபெற உள்ளது. ஒவ்வொரு இடத்திலும் 15 மீட்டர் ஆழம் வரை துளையிடப்பட்டு அந்த மண்ணானது ஆய்வுக்காக சேகரிக்கப்பட்டு வருகிறது. இந்த மண் பரிசோதனை அறிக்கையை வைத்து அதற்கு தேவையான உபகரணங்கள் வாங்கப்படும். ராமேசுவரம்-தனுஷ்கோடி வரையிலான ரெயில் பாதை புதுரோடு, நடராஜபுரம் வழியாக அல்லது வனத் துறைக்கு சொந்தமான இடத்தில் இருந்து ஜடாயுதீர்த்தம் வழியாக அமைக்கப்படலாம்” என்றார்.

தனுஷ்கோடி வரையிலான ரெயில் பாதை அமைக்க மண் ஆய்வு பணி தொடங்கப்பட்டதால் சுற்றுலா பயணிகளும், பொது மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story