தி.மு.க. பற்றி அபாண்டமாக பேசுகிறார் எடப்பாடி பழனிசாமி: உள்ளாட்சி தேர்தலை அ.தி.மு.க. தான் திட்டமிட்டு நடத்தவில்லை - விக்கிரவாண்டியில் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
தி.மு.க. பற்றி எடப்பாடி பழனிசாமி அபாண்டமாக பேசுகிறார். வேண்டுமென்றே திட்டமிட்டு அ.தி.மு.க.தான் உள்ளாட்சி தேர்தலை நடத்தவில்லை என்று விக்கிரவாண்டி தொகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட மு.க.ஸ்டாலின் பேசினார்.
விக்கிரவாண்டி,
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து, அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று டி.புதுப்பாளையம்,மேலக்கொந்தை, பனையபுரம், தொராவி, வாக்கூர், ராதாபுரம், சிந்தாமணி உள்ளிட்ட பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழகத்தில் தற்போது எந்த மாதிரியான ஆட்சி நடக்கிறது என்பது பற்றி உங்களுக்கு தெரியும். தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து வாய்க்கு வந்தபடி பேசுகிறார். உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் போனதன் காரணமாகத்தான் குடிநீர் தட்டுப்பாடு, சுகாதார சீர்கேடு ஏற்பட்டு டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவி வருகிறது என்று நான் பேசி வருகிறேன்.
இதை பொறுத்துக்கொள்ள முடியாமல் உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்தப்போகிறோம் என்று தெரிவித்துள்ளார். தேர்தல் நடத்தாமல் போனதற்கு தி.மு.க. தான் காரணம், அவர்கள் தான் வழக்கு போட்டது என்று எடப்பாடி பழனிசாமி அபாண்டமாக பொய் பேசி இருக்கிறார்.
தேர்தலை நடத்த வேண்டும் என்று தான் நாங்கள் நீதிமன்றத்துக்கு சென்றோம். தி.மு.க.வை சேர்ந்த ஆலந்தூர் பாரதி, தேர்தலை முறையாக நடத்த வேண்டும், மலைவாழ் மக்கள், பெண்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் என்று முறையாக கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீட்டை சரி செய்து உள்ளபடி நடத்த வேண்டும் என்று தான் நீதிமன்றத்துக்கு சென்றோம்.
இதில் 2 முறை அதை சரி செய்து நீதிமன்றம் தேதியை நிர்ணயம் செய்து, உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன்படி 2016-ம் ஆண்டு தேர்தலை நடத்தி இருக்க வேண்டும். மேலும் 31-12-2016-ம் தேதிக்குள் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் தெளிவாக உத்தரவிட்டது. ஆனால் இவர்கள் தேர்தல் நடத்த முன்வராமல் வேண்டுமென்றே, திட்டமிட்டு தள்ளி வைத்து செல்கிறார்கள். விரைவில் தி.மு.க. ஆட்சிக்கு வர உள்ளது, வந்தவுடன் தேர்தலை நடத்துவோம்.
விக்கிரவாண்டி, நாங்குநேரியில் பெரிய தோல்வியை சந்திக்கப்போகிறோம் என்கிற ஆத்திரத்தில் ஏதேதோ பேசி வருகிறார். ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளது, முறையாக விசாரணை நடத்த வேண்டும் என்று நாங்கள் தெரிவித்து வருகிறோம். அதை திசை திருப்ப தி.மு.க. தான், அவரது மரணத்துக்கு காரணம் என்று அபாண்டமான குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். இது திசைதிருப்புவதற்காக தான், வேறு எதற்கும் இல்லை. தி.மு.க. வழக்கு போட்டதால் தான், அவரால் உரிய சிகிச்சை பெறமுடியவில்லை என்று காரணத்தையும் கூறுகிறார்.
1996-ம் ஆண்டு ஜெயலலிதா மீது வழக்குப்போட்டது நாங்கள் இல்லை, சுப்பிரமணிய சாமிதான் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் தான் தீர்ப்பு வந்து, அவருக்கு தண்டனை வழங்கப்பட்டது. அதையெல்லாம் திசைதிருப்பி, நம் மீது கலங்கத்தை ஏற்படுத்த வேண்டுமென்றே இதுபோன்று தெரிவித்து வருகிறார். இதற்காக அவர்கள் அமைத்த விசாரணை கமிஷன் முறையாக நடப்பதாக எங்களுக்கு நம்பிக்கை இல்லை. தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன், மரணத்தில் உள்ள மர்மத்தை எல்லாம் கண்டுபிடித்து, அதை யார் செய்தார்களோ அவர்களுக்கு தண்டனை கொடுப்பது தான் தி.மு.க.வின் முதல் வேலையாக இருக்கும்.
அ.தி.மு.க. கூட்டணியில் இருப்பவர்கள் யார் என்றால், ஒருவரையொருவர் காட்டிக் கொடுத்தவர்கள், பழிவாங்கி கொண்டு இருப்பவர்கள் தான். அவர்களுடன் பா.ம.க. எப்படி ஒட்டி உறவாடி கொண்டு இருக்கிறார்கள் என்று தெரியும். அவர்களுடன் கூட்டணி சேர்ந்ததால் தான் நாடாளுமன்றத்தில் ஒரு இடத்தில் கூட பா.ம.க. வெற்றி பெறவில்லை என்பதை அவர்கள் மறந்து விடமாட்டார்கள். பா.ம.க.வினர் நம் மீது வைக்கும் விமர்சனங்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை.
ஆனால் 2015-ம் ஆண்டு டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் மிகப்பெரிய ஊழல் பட்டியலை தயார் செய்து அப்போது கவர்னராக இருந்த ரோசய்யாவிடம் கொடுத்தனர். அதில் 18 ஊழல்களை வரிசைப்படுத்தி சொல்லியிருந்தார். அதற்கு கவர்னர் நடவடிக்கை எடுக்கவில்லை. அதன்பின்னர் ஜி.கே. மணி உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டார். இவர்களுடன் தான் கூட்டணி வைத்துள்ளார்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
எத்தனையோ சாதனை திட்டங்களை தந்தவர் கலைஞர் ஆவார். அதற்கு சிகரம் வைத்தாற்போல் சாதனையாக சொல்ல வேண்டும் என்றால் இங்கு முண்டியம்பாக்கம் மருத்துவகல்லூரி மருத்துவமனையை கொண்டு வந்தது கலைஞர் தான் என்பது உங்களுக்கு தெரியும். ஆத்திரத்தில் உச்சாணி கொம்பில் நின்று பேசுகிறார் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி. ஆகையால் தற்போது நடக்கும் ஆட்சிக்கு முடிவுகட்டுவதற்கு முன்னோட்டமாக இந்த தேர்தல் அமைய இருக்கிறது. இதற்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அவர்களுக்கு தகுந்த பாடம் புகட்ட நீங்கள் தயாராக இருங்கள்.
122 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறோம் என்று சொல்கிறீர்கள். ஆட்சியில் இருக்க 117 பேர் தேவை. தற்போது 5 பேர் தான் கூடுதலாக உள்ளர்கள். அ.தி.மு.க. ஆட்சிக்கு எதிராக ஓட்டு அளித்ததால், ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் மீது வழக்கு, உச்சநீதிமன்றத்தில் இருக்கிறது. அதில் விரைவில் தீர்ப்பு வரப்போகிறது. எனவே அதில் 11 பேரை கழித்தால் மெஜாரிட்டி இருக்குமா?. வர இருக்கிற தேர்தலில் நிச்சயமாக தி.மு.க. தலைமையில் ஆட்சி அமையப் போவது உறுதி. அப்படி அமைவதற்கு இந்த தேர்தல் தான் முன்னோட்டமாக அமைய இருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன், மாவட்ட செயலாளர்கள் பொன்முடி, திருச்சி கே.என்.நேரு, கடலூர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எம்.பி.க்கள் ஜெகத்ரட்சகன், ரவிக்குமார், கதிர்ஆனந்த், துரை.கி.சரவணன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. அய்யப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கத்தினர் தேர்தலை புறக்கணிப்பு செய்யப்போவதாக அறிவித்து இருந்தனர். இந்த நிலையில் இவர்களிடம் பொன்முடி பேசி, கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதையடுத்து இருளர் பாதுகாப்பு சங்கத்தினர் விழுப்புரத்தில் உள்ள தி.மு.க. கட்சி அலுவலகத்தில் மு.க. ஸ்டாலினை சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்.
Related Tags :
Next Story