விவசாயியை கொலை செய்த வழக்கில் பிரபல ரவுடிக்கு ஆயுள் தண்டனை - பெரம்பலூர் மகிளா கோர்ட்டு தீர்ப்பு
விவசாயியை கடத்தி வந்து கழுத்தறுத்து கொலை செய்த வழக்கில் பிரபல ரவுடிக்கு ஆயுள் தண்டனை விதித்து பெரம்பலூர் மகிளா கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.
பெரம்பலூர்,
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி தாலுகா பட்டுக்கோட்டை அருகே உள்ள மாவடுகுறிச்சியை சேர்ந்தவர் அறிவழகன்(வயது 40). விவசாயி. இவரது தம்பி சக்திவேல், உறவினர் ஒருவருடன் சேர்ந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி பெரம்பலூர் மாவட்டம், அம்மாபாளையத்தை சேர்ந்த பலரிடம் லட்சக்கணக்கில் ரொக்கம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் வேலை வாங்கி கொடுக்கவில்லையாம். பெற்ற பணத்தையும் சக்திவேல் திருப்பி தரவும் இல்லையாம். இதனால் பணம் கொடுத்தவர்கள் சக்திவேலுவை சந்தித்து கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளனர். ஆனால் அவர்களை சக்திவேலுவின் அண்ணன் அறிவழகன் மற்றும் உறவினர் கோவிந்தராஜ் ஆகியோர் சமரசம் பேசி அனுப்பி வைத்துள்ளனர். சக்திவேலுவிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் இதுகுறித்து, பெரம்பலூர் மாவட்டம், அம்மாபாளையத்தை சேர்ந்த பிரபல ரவுடியான அழகிரியிடம்(35) கூறி முறையிட்டுள்ளனர். இதனால் கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ந் தேதி அழகிரி மற்றும் அவரது கோஷ்டியை சேர்ந்தவர்கள் சக்திவேல் இல்லாததால், அவரது அண்ணன் அறிவழகன் மற்றும் கோவிந்தராஜை மாவடுகுறிச்சியில் இருந்து பெரம்பலூருக்கு காரில் கடத்தி வந்து மிரட்டியுள்ளனர்.
பின்னர் அவர்களை கொலை செய்ய முடிவு செய்து, கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6-ந் தேதி பெரம்பலூர்- ஆத்தூர் சாலையில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் பின்புறம் வைத்து அறிவழகனை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்தனர். அப்போது கோவிந்தராஜ் வெட்டு காயங்களுடன் உயிர் தப்பினார். இது தொடர்பாக அழகிரி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டவர்களை பெரம்பலூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் ஜாமீனில் வெளியே வந்தனர். இந்நிலையில் அழகிரி வேறொரு வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
அறிவழகனை கொலை செய்த வழக்கு பெரம்பலூர் மாவட்ட மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கின் விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அறிவழகனை கடத்தி கொலை செய்த அழகிரிக்கு ஆயுள் தண்டனை விதித்தும், மேலும் இவ்வழக்கில் சேர்க்கப்பட்ட இளங்கோவன், சுவாமிமலை, தீபன், தீபக், சக்திவேல், சசிகரண், ரவிகரண் உள்பட 11 பேரை விடுதலை செய்வதாக அறிவித்தும் மகிளா கோர்ட்டு நீதிபதி மலர்விழி உத்தரவிட்டார். இதையடுத்து அழகிரி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் மகிளா கோர்ட்டு அரசு தரப்பு வக்கீல் வினோத்குமார் ஆஜராகி வாதாடினார்.
Related Tags :
Next Story