பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு: மாவட்டம் முழுவதும் அதிகாரிகள் அதிரடி ஆய்வு
மாவட்டம் முழுவதும் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துள்ளதால் அதிகாரிகள் அதிரடி ஆய்வு நடத்தி, ஓட்டல் உரிமையாளர்கள், வியாபாரிகளுக்கு அபராதம் விதித்தனர்.
க.பரமத்தி,
தமிழக அரசு கடந்த ஜனவரி 1-ந்தேதி முதல் சுற்றுச் சூழலை பாதுகாக்கும் பொருட்டு பாலித்தீன் பை, பிளாஸ்டிக் டம்ளர் உள்ளிட்ட பொருட் களுக்கு தடைவிதித்து உத்தரவிட்டது. கடைகள், வணிக நிறுவனங்களில் இவற்றை பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்தநிலையில் கரூர் மாவட்டம் முழுவதும் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து வருவதாக புகார்கள் வந்தது. இதையடுத்து நேற்று கரூர் மாவட்டம் க.பரமத்தி கடை வீதியில் பாலித்தீன் பை உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் பயன்பாட்டில் உள்ளதா? என க.பரமத்தி வட்டார வளர்ச்சி அதிகாரி ஜெயந்திராணி உள்பட பணியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த 2 ஓட்டல்களில் உணவு பொருட்களை பார்சல் கட்டுவதற்காக பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தியது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு இருந்த பிளாஸ்டிக் பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அந்த 2 ஓட்டல் உரிமையாளர்களுக்கும் சேர்த்து ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து அங்குள்ள கடைகள், வணிக நிறுவனங்களிலும் அதிகாரிகள் ஆய்வினை தொடர்ந்தனர். தீபாவளியையொட்டி இனிப்புகள் உள்ளிட்டவற்றை பாலித்தீன் பைகளில் போட்டு அடைத்து விற்க கூடாது. மாறாக அளவிற்கேற்றபடி அட்டை பெட்டியில் அடுக்கி வைத்து விற்பனை செய்ய வேண்டும் என இனிப்பகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து பாலித்தீன் பை பயன்பாடு கண்டறியப்பட்டால் அபராதம் விதிப்பதோடு சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல் கரூர், குளித்தலை நகராட்சி மற்றும் பேரூராட்சி, ஊராட்சி பகுதிகள் உள்பட மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் அதிகாரிகள் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து அதிரடி ஆய்வு செய்து அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பஞ்சப்பட்டி ஊராட்சி பகுதிகளில் மாவட்ட திட்ட இயக்குனர் கவிதா தலைமையில் பணியாளர்கள் பஞ்சப்பட்டி வாரச்சந்தை பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்திய வியாபாரிகள் 5 பேருக்கு தலா ரூ.500 வீதம் அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டது. மேலும் பிளாஸ்டிக் பைகளும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கிருஷ்ணராயபுரம் ஒன்றிய ஆணையர் புவனேஸ்வரி, ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் உமாசங்கர், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பூங்கொடி, ஊராட்சி செயலாளர் ரவி ஆகியோர் உடன் இருந்தனர். இதேபோல் சேங்கல் ஊராட்சியிலும் ஆய்வு நடந்தது.
Related Tags :
Next Story