வெல்லம், நாட்டுச்சர்க்கரை தயாரிப்பிற்கு ரசாயன பொருட்களை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை - கலெக்டர் மெகராஜ் எச்சரிக்கை
வெல்லம் மற்றும் நாட்டுச்சர்க்கரை தயாரிக்கும் ஆலைகளில் அஸ்கா சர்க்கரை மற்றும் ரசாயன பொருட்கள் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நாமக்கல் கலெக்டர் மெகராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாமக்கல்,
நாமக்கல்லில் வெல்லம், நாட்டுச்சர்க்கரை உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு நாமக்கல் மாவட்ட கலெக்டர் மெகராஜ் தலைமை தாங்கினார். உணவு பாதுகாப்பு துறையின் நாமக்கல் மாவட்ட நியமன அலுவலர் அருண் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் கலெக்டர் மெகராஜ் பேசியதாவது:-
வெல்லம் மற்றும் நாட்டுச்சர்க்கரை தயாரிக்கும் இடம் மிகவும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருக்கவேண்டும். ஈக்கள் மற்றும் எலிகள் இல்லாமல் வெல்லம் தயாரிக்கும் இடத்தை பராமரிக்க வேண்டும். அனைத்து ஆலைக்கொட்டகை மற்றும் விற்பனையாளர்கள் உணவு பாதுகாப்பு தரச்சட்டம் மற்றும் விதிமுறைகளை பின்பற்றுவதோடு, உணவு பாதுகாப்பு துறையின் உரிமம் மற்றும் பதிவுசான்றை பெற்று இருக்க வேண்டும்.
அதேபோல் வெல்லம் மற்றும் நாட்டுச்சர்க்கரை பொட்டலங்களின் மீது விதிமுறைப்படி தயாரிப்பு தேதி, காலாவதி தேதி, உரிம எண், முழு முகவரி மற்றும் சைவ குறியீடு போன்றவை அச்சிடப்பட்டு விற்பனை செய்ய வேண்டும். இனிவரும் காலங்களில் தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்படுவதோடு, அவற்றில் சேகரிக்கப்படும் உணவு மாதிரிகளின் பகுப்பாய்வு அறிக்கையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
வெல்லம் மற்றும் நாட்டுச்சர்க்கரை தயாரிக்கும் ஆலைகளில் அஸ்கா சர்க்கரை மற்றும் ரசாயன பொருட்கள் பயன்படுத்த கூடாது. அவ்வாறு பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டுச்சர்க்கரையில் அஸ்கா சர்க்கரை மற்றும் தடைசெய்யப்பட்ட ரசாயன பொருட்களை கலப்படம் செய்து வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்யக்கூடாது. ஆலை கொட்டகைகளில் தயாரிப்பில் ஈடுபடும் பணியாளர்கள் தலையுறை, காலுறை அணிந்து இருக்கவேண்டும்.
இவ்வாறு கலெக்டர் மெகராஜ் பேசினார்.
Related Tags :
Next Story