நாங்குநேரி தொகுதியில் “அ.தி.மு.க. வெற்றியை தடுக்க தி.மு.க. பல வழிகளில் செயல்படுகிறது” - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றச்சாட்டு


நாங்குநேரி தொகுதியில் “அ.தி.மு.க. வெற்றியை தடுக்க தி.மு.க. பல வழிகளில் செயல்படுகிறது” - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 18 Oct 2019 11:15 PM GMT (Updated: 18 Oct 2019 9:39 PM GMT)

நாங்குநேரி தொகுதியில் அ.தி.மு.க. வெற்றியை தடுக்க தி.மு.க. பல வழிகளில் செயல்பட்டு வருகிறது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றம் சாட்டினார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முஸ்லிம் ஜமாஅத் தலைவர்கள் என்னிடம் மனு கொடுக்க வந்தனர். அவர்களை மறுநாள் காலை வர சொல்லி அனுப்பினேன். ஆனால் அதற்குள் நான் முஸ்லிம் ஜமாஅத் தலைவர்களை அவதூறாக பேசியதாக மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா போன்ற சிலர் தவறான வதந்திகளை பரப்பி வருகிறார்கள். இது சிறுபான்மையினர் ஓட்டுகளை தி.மு.க. பக்கம் திருப்பும் செயலாகும். மதங்கள் நமக்கு பலமாக இருக்க வேண்டும். போராட்ட களமாக மாறக்கூடாது.

நாங்குநேரியில் தி.மு.க. எம்.எல்.ஏ. உள்ளிட்டவர்கள் ஓட்டுக்கு பணம் பட்டுவாடா செய்தது தொடர்பாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதிலிருந்தே அ.தி.மு.க.வின் நிலைப்பாடு என்றும் வெளிப்படையானது என்பதையும், தி.மு.க.வின் நிலைப்பாடு உள்நோக்கம் உள்ளது என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

தி.மு.க. தலைவர்கள் அரசாங்க சொத்துகளை தங்கள் சொத்தாக நினைப்பவர்கள். முரசொலி அலுவலகத்தில் பஞ்சமி நிலம் இருப்பது அனைவருக்கும் தெரியும். மு.க.ஸ்டாலின் அசுரன் படம் பார்த்தது எதற்காக? அதில் நடிகர் தனுஷ் ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களுக்காக பேசியுள்ளார். அந்த ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களின் வாக்குகளை பெற இப்படி ஒரு நாடகம் நடிக்கிறார் மு.க.ஸ்டாலின். எங்களுக்கு இப்படி நாடகம் போட தெரியாது. தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனைவருக்கும் பொதுவான ஆட்சியை வழங்கி வருகிறார். இடைத்தேர்தல் நடக்க உள்ள தொகுதிகளில் மக்கள் எங்களுக்கு வாக்களிக்க தயாராகி விட்டார்கள்.

தி.மு.க. ஆட்சியில் நாங்குநேரி தொகுதியில் செய்யப்பட்ட திட்டங்கள் பற்றியும், அ.தி.மு.க. ஆட்சியில் செய்யப்பட்ட திட்டங்கள் பற்றியும் அங்கு எம்.எல்.ஏ.வாக இருந்த வசந்தகுமாரிடம் கேட்க வேண்டும். நாங்குநேரி தொகுதி மக்களின் குரலை வசந்தகுமார் சட்டமன்றத்தில் பிரதிபலித்து இருக்க வேண்டும். ஆனால் அவர் மக்கள் பிரச்சினை குறித்து பேசியது இல்லை. அந்த தொகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று அ.தி.மு.க. அரசு தான் பல திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. நாங்குநேரி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெறுவார். இதனை தடுக்க தி.மு.க. பல வழிகளில் செயல்பட்டு வருகிறது.

மத்திய அரசின் அதிகாரத்தை பயன்படுத்தும் எம்.பி.க்களாக தி.மு.க. மற்றும் காங்கிரஸ் எம்.பி.க்கள் உள்ளனர். ஆனால் தமிழகத்திற்கு பிரதமர் வந்தால் மட்டும் எதிர்க்கிறார்கள். இது என்ன நாடகம்? தி.மு.க.வை பொறுத்தவரை டெல்லியில் ஒரு நிலைப்பாடு, தமிழகத்தில் ஒரு நிலைப்பாடு. இதுபோன்ற குறுகிய நிலைப்பாடு அ.தி.மு.க.விற்கு கிடையாது. வெளிப்படை தன்மையுள்ள கட்சி அ.தி.மு.க.

டி.டி.வி.தினகரன் கட்சியில் இருந்து அனைவரும் அ.தி.மு.க.வில் இணைந்து விட்டனர். ஆனால், டி.டி.வி.தினகரனை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். கட்சியும், ஆட்சியும் வலுவாக உள்ளது. எந்த முடிவு எடுத்தாலும் முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் தான் எடுப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story