கோவில்பட்டியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டியில் ஓடை ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டி,
கோவில்பட்டி கடலைக்கார தெரு, தங்கம்மாள் கோவில் தெரு சந்திப்பு பகுதியில் இருந்த கழிப்பறை கட்டிடத்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நகரசபை நிர்வாகத்தினர் அகற்றினர். பின்னர் அங்கு புதிய கழிப்பறை கட்டப்படவில்லை. இதனால் அங்கு சாலையோரம் திறந்தவெளியில் இயற்கை உபாதை கழிப்பதாலும், குப்பைகளை கொட்டுவதாலும் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. தற்போது பெய்த மழையில் அங்கு மழைநீர் தேங்கியதால் சேறும் சகதியுமாக உள்ளது.
மேலும் வண்ணார் ஊருணி ஓடையிலும் ஆக்கிரமிப்புகள் நிறைந்ததால், கழிவுநீர் வழிந்தோடாமல், மழைநீருடன் கலந்து சாலையில் ஓடுகிறது. எனவே ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று கோவில்பட்டி கடலைக்கார தெரு, தங்கம்மாள் கோவில் தெரு சந்திப்பு பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் முகத்தில் துணியை கட்டி இருந்தனர்.
நகர செயலாளர் சரோஜா தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் பரமராஜ், தாலுகா செயலாளர் பாபு, நகர துணை செயலாளர் அலாவுதீன், நகர குழு உறுப்பினர்கள் விஜயலட்சுமி, முருகேசன், ஆதிமூலம், சிதம்பரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story