தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: ஒருநபர் ஆணையத்தில் ஆஜராகி கீதாஜீவன் எம்.எல்.ஏ. வாக்குமூலம்
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து ஒருநபர் ஆணையத்தில் ஆஜராகி கீதாஜீவன் எம்.எல்.ஏ. வாக்குமூலம் அளித்தார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ந்தேதி நடந்த துப்பாக்கி சூடு, தடியடி மற்றும் தொடர்ந்து நடந்த சம்பவங்களில் 13 பேர் பலியானார்கள். இதுதொடர்பாக ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. விசாரணை அதிகாரி பல்வேறு கட்டமாக விசாரணை நடத்தி வருகிறார். ஏற்கனவே 14 கட்ட விசாரணை நடத்தப்பட்டு, 379 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதுவரை 555 ஆவணங்களும் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
இந்த நிலையில் 15-வது கட்ட விசாரணை தூத்துக்குடி விருந்தினர் மாளிகையில் உள்ள முகாம் அலுவலகத்தில் விசாரணை அதிகாரி அருணா ஜெகதீசன் தலைமையில் கடந்த 16-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. 3-வது நாளான நேற்று கீதாஜீவன் எம்.எல்.ஏ. உள்பட 5 பேர் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. அதன்படி கீதாஜீவன் எம்.எல்.ஏ. ஆணையம் முன்பு ஆஜராகி சுமார் ஒரு மணி நேரம் வாக்குமூலம் அளித்தார். அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
பின்னர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-
தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான விசாரணை ஆணையத்தில் ஆஜராக எனக்கு சம்மன் அளிக்கப்பட்டு இருந்தது. அதன்படி நான் ஆஜராகி, அன்றைய தினம் நடந்த நிகழ்வு குறித்து தெரிவித்தேன். என்னை பொறுத்தவரை ஒட்டுமொத்தமாக சொல்ல வேண்டும் என்றால் அன்றைய தினத்தில் மக்கள் போராட்டத்தை அரசு முறையாக கையாளவில்லை என்பது தான் எங்கள் குற்றச்சாட்டு.
100 நாட்கள் நடந்த போராட்டத்தை கண்டுகொள்ளவில்லை. அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. அரசின் கவனக்குறைவு, மெத்தனப்போக்கு, அலட்சியம் தான் இதற்கு காரணம். தற்போது வரை துப்பாக்கி சூடுக்கு உத்தரவிட்டது யார் என்று தெரியவில்லை. ஆகவே இது முழுக்க முழுக்க நிர்வாக சீர்கேடு. மக்கள் நலனுக்காக தான் அரசு. மக்களின் உணர்வுகளை அரசு மதிக்க வேண்டும். இது என்னுடைய வேண்டுகோள். இவ்வாறு அவர் பேசினார்.
அதேபோல் பொதுநல வழக்குகள் தொடர்ந்த வக்கீல்கள் சிலரும் விசாரணை ஆணையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். இன்றுடன் (சனிக்கிழமை) 15-வது கட்ட விசாரணை நிறைவடைகிறது.
Related Tags :
Next Story