ஜெயலலிதா இருந்தபோதே கூட்டணி அமைத்தோம் - ரங்கசாமி விளக்கம்


ஜெயலலிதா இருந்தபோதே கூட்டணி அமைத்தோம் - ரங்கசாமி விளக்கம்
x
தினத்தந்தி 18 Oct 2019 11:15 PM GMT (Updated: 18 Oct 2019 11:07 PM GMT)

ஜெயலலிதா உயிரோடு இருந்தபோதே அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தோம் என்று ரங்கசாமி கூறினார்.

புதுச்சேரி,

புதுவை காமராஜ் நகர் தொகுதியில் போட்டியிடும் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரனை ஆதரித்து என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி கிருஷ்ணாநகரில் வீடுவீடாக சென்று வாக்குசேகரித்தார். அப்போது அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ., துணை செயலாளர் கணேசன், என்.ஆர்.காங்கிரஸ் பொதுச்செயலாளர் பாலன், மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

வாக்குசேகரிப்பின்போது தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் குற்றச்சாட்டுகள் குறித்து ரங்கசாமியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதில் அளித்து அவர்கூறியதாவது:-

ஜெயலலிதா உயிரோடு இருந்தபோதே அ.தி.மு.க.வுக்கு நாங்கள் மேல்சபை எம்.பி. பதவியை கொடுத்தோம். அதேபோல் நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலிலும் கூட்டணி அமைத்தோம்.

ஆனால் அவர்களை நோக்கி நாங்கள் எழுப்பும் கேள்விக்கு பதில் அளிக்காமல் பிரச்சினைகளை எப்படி திசை திருப்ப முடியுமோ? அப்படி பேசுகிறார்கள். நாங்கள் ஆட்சியில் இருக்கும்போதும் இதே அதிகாரம்தான் இருந்தது.

அதைக்கொண்டே நலத்திட்டங்களை செயல்படுத்தினோம். இலவச அரிசி வழங்கினோம். இவர்கள் அதிகாரம் தொடர்பாக நீதிமன்றம் சென்றார்கள். நீதிமன்றமும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று கூறியுள்ளது. மீண்டும் ஏன் கவர்னரையே குற்றஞ்சாட்டி வருகிறீர்கள்.

நாங்கள் எதற்காக ஜால்ரா போடவேண்டும். 3 ஆண்டுகாலத்தில் என்ன திட்டத்தை செயல்படுத்தி உள்ளர்கள் என்று கேட்டதற்கு முதல்-அமைச்சரிடம் இருந்து இதுவரை பதில் இல்லை. இலவச அரிசிகூட இவர்களால் போட முடியவில்லை. அதை அன்பழகன் எம்.எல்.ஏ. அடிக்கடி சுட்டிக்காட்டி வருகிறார். என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளருக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

இவ்வாறு ரங்கசாமி கூறினார்.

Next Story