சிதம்பரத்தில் நகைக்கடையில் 1½ பவுன் தங்க சங்கிலி திருட்டு; கண்காணிப்பு கேமராவில் பதிவான தம்பதிக்கு போலீஸ் வலைவீச்சு


சிதம்பரத்தில் நகைக்கடையில் 1½ பவுன் தங்க சங்கிலி திருட்டு; கண்காணிப்பு கேமராவில் பதிவான தம்பதிக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 20 Oct 2019 4:45 AM IST (Updated: 19 Oct 2019 11:08 PM IST)
t-max-icont-min-icon

சிதம்பரத்தில் உள்ள நகைக்கடையில் 1½ பவுன் தங்க சங்கிலியை திருடிய தம்பதியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சிதம்பரம்,

சிதம்பரம் உப்புக்கடை தெருவை சேர்ந்தவர் சுந்தரம் (வயது 60). இவர் சிதம்பரம் காசுக்கடை தெருவில் நகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடைக்கு நேற்று முன்தினம் மதியம் மோட்டார் சைக்கிளில் ஒரு தம்பதி வந்தனர். அவர்கள் தங்களுக்கு ஒரு பவுனில் தங்க சங்கிலி மற்றும் மோதிரம் வேண்டும் என சுந்தரத்திடம் கேட்டனர். உடனே அவர் கடையில் இருந்த நகைகளை எடுத்து அவர்களுக்கு காண்பித்தார். அதனை பார்த்த தம்பதியினர் தங்களுக்கு நகை மாடல்கள் பிடிக்கவில்லை என கூறிவிட்டு, அங்கிருந்து சென்று விட்டனர். இதையடுத்து சுந்தரம் கடையில் இருந்த நகைகளை சோதனை செய்த போது, 1½ பவுன் தங்க சங்கிலியை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனே அவர் கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது, தம்பதி என கூறிக்கொண்டு 2 பேர் கடைக்கு வந்ததும், அதில் அந்த பெண் நகைகளை பார்த்துக் கொண்டிருப்பதும், பின்னர் சுந்தரம் திரும்பிய போது அந்த பெண்ணின் கணவர் 1½ பவுன் தங்க சங்கிலியை நைசாக திருடி சட்டை பையில் வைத்துக் கொண்டதும் பதிவாகி இருந்தது.

இதையடுத்து சுந்தரம், சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் கண்காணிப்பு கேமராவில் பதிவான தம்பதியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். சிதம்பரம் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் திருட்டு, வழிப்பறி போன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

Next Story