சிதம்பரம் ரவுடி கொலை வழக்கில் கைதான 3 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது


சிதம்பரம் ரவுடி கொலை வழக்கில் கைதான 3 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 20 Oct 2019 5:00 AM IST (Updated: 19 Oct 2019 11:13 PM IST)
t-max-icont-min-icon

சிதம்பரம் அண்ணாமலை நகரில் ரவுடி கொலை வழக்கில் கைதான 3 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.

கடலூர்,

சிதம்பரம் அண்ணாமலைநகர் கலுங்குமேட்டை சேர்ந்தவர் பாண்டியராஜ் என்ற கோழி பாண்டியன். பிரபல ரவுடியான இவர் கடந்த 20.8.2019 அன்று இரவு 9.30 மணி அளவில் அண்ணாமலை நகரில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் அவர் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசி படுகொலை செய்தது.

இது தொடர்பாக சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உத்தரவின் பேரில் அண்ணாமலை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, வடமூரை சேர்ந்த சரத் என்ற சரத்குமார்(வயது27), கும்பகோணத்தை சேர்ந்த கதிரவன்(27), கடலூர் முதுநகரை சேர்ந்த ஜெயசீலன்(22) உள்பட 6 ரவுடிகளை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தார்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சரத்குமார் மீது அண்ணாமலை நகர், பரங்கிப்பேட்டை ஆகிய போலீஸ் நிலையங்களில் 3 கொலை வழக்குகள், 2 கொலை முயற்சி வழக்குகள் மற்றும் 2 வெடிகுண்டு வழக்குகளும், கதிரவன் மீது கும்பகோணம், விழுப்புரம், நாச்சியார் கோவில் ஆகிய போலீஸ் நிலையங்களில் 4 கொலை வழக்குகள், 3 கொலை முயற்சி வழக்குகள், 3 வெடிகுண்டு வழக்குகளும் உள்ளன.

எனவே சரத்குமார், கதிரவன் மற்றும் ஜெயசீலன் ஆகியோரின் குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் பொருட்டு 3 பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறு மாவட்ட கலெக்டருக்கு போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் பரிந்துரை செய்தார். அதன்பேரில் கலெக்டர் அன்புசெல்வன் உத்தரவுபடி சரத்குமார், கதிரவன், ஜெயசீலன் ஆகிய 3 பேரையும் இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தார். இதற்கான உத்தரவு நகல் மத்திய சிறையில் இருக்கும் கதிரவன் உள்ளிட்ட 3 பேரிடமும் சிறை அதிகாரிகள் மூலம் வழங்கப்பட்டது.

Next Story