பழனி அருகே பாலம் கட்டக்கோரி கிராம மக்கள் மறியலில் ஈடுபட முயற்சி


பழனி அருகே பாலம் கட்டக்கோரி கிராம மக்கள் மறியலில் ஈடுபட முயற்சி
x
தினத்தந்தி 19 Oct 2019 11:15 PM GMT (Updated: 19 Oct 2019 6:25 PM GMT)

பழனி அருகே வாய்க்கால் பாலத்தை கட்டக்கோரி கிராம மக்கள் மறியலுக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

பழனி,

பழனி அருகே உள்ளது கலிக்கநாயக்கன்பட்டி கிராமம். இந்த ஊரின் கிழக்கு பகுதியில் குளம் உள்ளது. இந்த குளத்தில் இருந்து மேற்குப்புறத்தில் உள்ள குளத்துக்கு தண்ணீர் செல்வதற்கான வாய்க்கால் அமைந்துள்ளது. இந்த ஓடையை கடந்து செல்வதற்காக, அதில் சிறிய பாலம் அமைக்கப்பட்டிருந்தது.

குடிமராமத்து பணி நடந்தபோது ஓடையில் இருந்த செடி, கொடிகள் அகற்றப்பட்டன. அப்போது பாலமும் இடித்து அப்புறப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த பாலம் அமைக்கப்படவில்லை. தற்போது மழை பெய்து வருவதால் அந்த ஓடையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதனால் அப்பகுதி மக்கள் அந்த ஓடையை கடந்து செல்ல கடும் சிரமம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பாலம் கட்டக்கோரி புகார் மனு அளித்தனர். இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று அப்பகுதி மக்கள் சிலர், கலிக்கநாயக்கன்பட்டி பாலம் அருகே திரண்டனர். பின்னர் பாலம் அமைக்காததால் ஓடையை கடந்து செல்வதில் கடும் சிரமம் ஏற்படுவதாக கூறி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட முயன்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த பழனி டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

பின்னர் அவர்கள் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி விரைவில் பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். அதைத்தொடர்ந்து கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பாலம் கட்டக்கோரி கிராம மக்கள் மறியிலில் ஈடுபட முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story