ஜெருசலேம் புனித பயணம் செல்ல கிறிஸ்தவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு


ஜெருசலேம் புனித பயணம் செல்ல கிறிஸ்தவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு
x
தினத்தந்தி 20 Oct 2019 4:15 AM IST (Updated: 19 Oct 2019 11:55 PM IST)
t-max-icont-min-icon

ஜெருசலேம் புனித பயணம் செல்வதற்கு கிறிஸ்தவர்கள் உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல்,

தமிழ்நாட்டில் இருந்து ஜெருசலேம் புனித பயணம் செல்லும், கிறிஸ்தவர்களுக்கு அரசு சார்பில் தலா ரூ.20 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் ஓராண்டில் 50 கன்னியாஸ்திரிகள் உள்பட மொத்தம் 600 பேருக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த புனித பயணம் பெத்லஹேம், ஜெருசலேம், நாசரேத், ஜோர்டான் நதி, கலிலேயா சமுத்திரம் உள்ளிட்ட கிறிஸ்தவ புனித தலங்களை உள்ளடக்கியது.

இந்த உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்க அடுத்த மாதம் (நவம்பர்) 30-ந்தேதி வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, புனித பயணம் மேற்கொள்ள உதவித்தொகை பெற விரும்பும் கிறிஸ்தவர்கள், www.bcmbcmw.tn.gov.in எனும் இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம்.

மேலும் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை ‘‘ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமகால், பாரம்பரிய கட்டிடம், முதல்தளம், சேப்பாக்கம், சென்னை-600 005’’ எனும் முகவரிக்கு அடுத்த மாதம் 30-ந்தேதிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும். உறையின் மேல் கிறிஸ்தவர்களின் ஜெருசலேம் புனித பயணத்துக்கான உதவித்தொகை விண்ணப்பம் 2019-2020 என்று குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.

இந்த வாய்ப்பை திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த கிறிஸ்தவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்று கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

Next Story