நன்னிலம் அருகே, ரெயிலில் அடிபட்டு தொழிலாளி சாவு
நன்னிலம் அருகே தண்டவாளத்தில் நின்ற ஆட்டை விரட்ட சென்ற கூலி தொழிலாளி ரெயிலில் அடிபட்டு பரிதாபமாக இறந்தார்.
நன்னிலம்,
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள முடிகொண்டான் காலனி தெருவை சேர்ந்தவர் ஜெயசங்கர் (வயது37). கூலி தொழிலாளி. இவர் சம்பவத்தன்று தனக்கு சொந்தமான ஆடுகளை அந்த பகுதியில் மேய்த்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு ஆடு அங்கு உள்ள ரெயில் தண்டவாளத்துக்கு சென்று விட்டது.
அதை விரட்ட சென்றபோது மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் நோக்கி சென்ற ரெயிலில் அடிபட்டு ஜெயசங்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து முடிகொண்டான் கிராம நிர்வாக அலுவலர் பிரகாஷ்கண்ணா திருவாரூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
அதன்பேரில் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஜெயசங்கரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெயசங்கருக்கு, ஜெயந்தி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.
தண்டவாளத்தில் நின்ற ஆட்டை விரட்ட சென்ற கூலி தொழிலாளி ரெயிலில் அடிபட்டு இறந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story