திருப்பூரில் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி ரூ.2½ கோடி மோசடி; பாதிக்கப்பட்டவர்கள் பணத்தை கேட்டு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்


திருப்பூரில் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி ரூ.2½ கோடி மோசடி; பாதிக்கப்பட்டவர்கள் பணத்தை கேட்டு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்
x
தினத்தந்தி 20 Oct 2019 4:45 AM IST (Updated: 20 Oct 2019 1:53 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி சுமார் ரூ.2½ கோடி மோசடி செய்தவரிடம் இருந்து பணத்தை மீட்டு தரக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் வீரபாண்டி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வீரபாண்டி,

திருப்பூர் தாராபுரம் ரோடு பலவஞ்சிபாளையம் திருக்குமரன் நகரில் பனியன் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருபவர் குணசேகரன் (வயது 44). இவர் நமோ கார்மெண்ட்ஸ் என்ற பெயரில் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் சுமார் 60-க்கும் மேற்பட்ட டையிங், பிரிண்டிங், எம்ப்ராய்டரி, பேக்கிங் உள்ளிட்ட ஜாப் ஒர்க் நிறுவனங்கள் ஜாப் ஒர்க் அடிப்படையில் பணியாற்றி வருகின்றன.

இந்தநிலையில் கடந்த 5 மாதங்களாக ஜாப் ஒர்க் செய்த உரிமையாளர்களுக்கு ஏற்றுமதி நிறுவனம் உரிய பணத்தை தராமல் இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஜாப் ஒர்க் உரிமையாளர்கள் ஏற்றுமதி நிறுவனத்தின் உரிமையாளர் குணசேகரனை நேரில் சந்தித்து உரிய தொகையை கேட்டுள்ளனர். அதற்கு அவர் காசோலை கொடுத்து உள்ளார்.

ஆனால் அந்த காசோலையை வங்கியில் செலுத்திய போது, வங்கியில் அவரது கணக்கில் பணம் இல்லை என்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஜாப் ஒர்க் உரிமையாளர்கள் திருப்பூர் வீரபாண்டி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி புகார் மனு அளித்தனர்.

மனுவை பெற்றுக்கொண்ட போலீசார் உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் இறக்குமதி நிறுவன உரிமையாளர் தனக்கு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்த வகையில் அதற்கான தொகை இன்னும் வந்து சேராததால் தற்போது ஜாப் ஒர்க் நிறுவனங்களுக்கு பணம் கொடுக்க முடியவில்லை என தெரிவித்ததாக தெரிகிறது.

இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறும்போது, “ரூ.2½ கோடி அளவுக்கு ஜாப் ஒர்க் பணி செய்தவர்களுக்கு கூலித்தொகையை கொடுக்காமல் மோசடி செய்ய நினைக்கிறார். மேலும் தற்போது தீபாவளிக்கு தொழிலாளர்களுக்கு போனஸ் கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளதால் ஜாப் ஒர்க் கட்டணம் கிடைத்தால் மட்டுமே எங்களது தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்க முடியும் என்ற சூழல் இருந்து வருகிறது. எனவே போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து எங்களுக்கு சேரவேண்டிய தொகையை பெற்றுத் தர வேண்டும்” என்றனர்.

Next Story