சேலத்தில், இரட்டிப்பு பணம் தருவதாக கூறி 350 பேரிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்த தம்பதி


சேலத்தில், இரட்டிப்பு பணம் தருவதாக கூறி 350 பேரிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்த தம்பதி
x
தினத்தந்தி 20 Oct 2019 3:30 AM IST (Updated: 20 Oct 2019 1:57 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் இரட்டிப்பு பணம் தருவதாக கூறி 350 பேரிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்த தம்பதி குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

சேலம்,

சேலம் ஜாகீர்ரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மணிவண்ணன் (வயது 38). இவர் ஆர்.எம்.வி. குரூப் என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனத்தின் அலுவலகம் சேலம் புதிய பஸ்நிலையம் அருகே உள்ள கிரீன்பார்க் அவென்யூ குடியிருப்பில் இயங்கி வந்தது. இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் 100 நாளில் இரட்டிப்பாக பணம் தருவதாகவும், மேலும் அவர் நடத்தி வரும் ஊறுகாய், மசாலா வகைகள், சமையல் எண்ணெய் வகைகள் ஆகியவற்றை விற்பனை செய்ய பகுதி வாரியாக வினியோக உரிமை பெற்று தருவதாகவும், அதிக அளவில் பணம் செலுத்தினால் வெளிநாட்டிற்கு மேற்படி பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான வினியோக உரிமை பெற்று தருவதாகவும் கூறினார்.

அதுமட்டுமல்லாமல் முதலீடு பணத்திற்கு லாபமும், 10 சதவீதம் ஊக்கத்தொகையும் தருவதாக கூறினார். இதனை நம்பி ஏராளமானோர் கோடிக்கணக்கில் பணத்தை முதலீடு செய்தனர். இப்படி வாங்கிய பணத்தை தனது டேபிள் முழுவதும் வரிசையாக அடுக்கி வைத்து புகைப்படமும் எடுத்துக்கொண்டார். இந்த போட்டோக்களை முதலீடு செய்தவர்களுக்கு அனுப்பி வைத்து அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தினார். இதன் மூலம் அவர்களும், அவர்களது உறவினர்களும் அதிக அளவில் பணத்தை செலுத்தினர்.

மணிவண்ணன் கவர்ச்சிக்கரமான விளம்பரங்களையும் செய்துள்ளார். இதைப்பார்த்து சேலம் மற்றும் பிற மாவட்டங்களை சேர்ந்தவர்களும் அதிக அளவில் முதலீடு செய்தனர். பல கோடி பணத்தை வசூலித்த மணிவண்ணன், அவருடைய மனைவி இந்துமதி (32) ஆகியோர் கடந்த 2018-ம் ஆண்டு முதல் தலைமறைவாக இருந்தனர். இதைத்தொடர்ந்து மணிவண்ணன் மீது பல்வேறு நபர்கள் மோசடி புகார்களை சேலம் மாநகர போலீஸ் கமி‌‌ஷனர் அலுவலகத்தில் கொடுத்தனர்.

அதன்படி சேலம் அங்கம்மாள் காலனியை சேர்ந்த பெண்ணிடமும், அவர்களது உறவினர்களிடமும் மசாலா, எண்ணெய் வகைகள் ஏரியா வாரியாக விற்பனை செய்ய டீலர்‌ஷிப் வாங்கி தருவதாக கூறி ரூ.63 லட்சம் வாங்கியுள்ளார்.

சீலநாயக்கன்பட்டியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் மணிகண்டன் மற்றும் அவருடைய உறவினர்களிடம் ஆசை வார்த்தை கூறி ரூ.2 கோடியே 82 லட்சமும், குகைப்பகுதியை சேர்ந்த அரிசி கடை அதிபர் கார்த்திகேயன் என்பவரிடம் ரூ.3 கோடியே 53 லட்சம் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளார். சேலம் 5 ரோட்டில் அச்சகம் நடத்தி வரும் ஒருவரிடம் ரூ.34 லட்சத்து 60 ஆயிரம் பெற்றுக்கொண்டு, ரூ.7 லட்சத்தை மட்டும் திருப்பி கொடுத்து விட்டு மீதி பணத்தை கொடுக்காமல் மோசடி செய்தார்.

இவ்வாறு 350-க்கும் மேற்பட்டோரிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார். இதில் பணத்தை திருப்பி கேட்கும் நபர்களுக்கு மணிவண்ணன் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதேபோல் ஏமாந்தவர்களில் பலர் கடன் தொல்லையாலும், தாங்கள் நடத்தி வந்த வியாபாரத்தில் பெரும் ந‌‌ஷ்டம் அடைந்து தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு ஆளாகி, க‌‌ஷ்டமான சூழ்நிலையிலும் இருந்து வருகிறார்கள்.

இதைத்தொடர்ந்து மணிவண்ணன், அவருடைய மனைவி இந்துமதி ஆகியோரை பிடிக்க போலீஸ் கமி‌‌ஷனர் செந்தில்குமார் உத்தரவின் பேரில் உதவி போலீஸ் கமி‌‌ஷனர் சரவணன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் குமார், விஜயகுமார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

இதனிடையே இந்த தம்பதி சிங்கப்பூர், குவைத் உள்ளிட்ட நாடுகளில் தலைமறைவாக இருந்தனர். இவர்கள் சமீபத்தில் தான் சேலத்திற்கு வந்தனர். நேற்று முன்தினம் மணிவண்ணன், இந்துமதி ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 மடிக்கணினிகள், 13 செல்போன்கள், 2 சொகுசு கார்கள், 10 பவுன் நகை, 2 வளையல்கள், ரூ.50 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் வழக்கு தொடர்பான போலி ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. பின்னர் கைதான தம்பதி சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

மோசடி செய்த பணத்தில் மணிவண்ணன் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று அங்குள்ள நட்சத்திர ஓட்டல்களில் தங்கி பெண்களுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இந்த தம்பதி மோசடி செய்த பணத்தில் வங்கிகளில் பலகோடி முதலீடு செய்திருப்பதும், பல்வேறு பகுதிகளில் சொத்துக்கள் வாங்கி குவித்து இருப்பதும் தெரியவந்துள்ளது. அவர்கள் எங்கெல்லாம் சொத்து வாங்கி குவித்தார்கள் என்பதை அறிய, அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

பண மோசடிக்கு மணிவண்ணனின் சகோதரர்கள் ராம், லட்சுமணன், மாமனார் மாணிக்கம், மாமியார் சரஸ்வதி மற்றும் பழைய சூரமங்கலத்தை சேர்ந்த அலுவலக ஊழியர் ஈஸ்வரி ஆகியோரும் உடந்தையாக இருந்துள்ளனர். இவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.

இந்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story