கழுகுமலையில் மர்ம காய்ச்சலுக்கு வாலிபர் பலி


கழுகுமலையில் மர்ம காய்ச்சலுக்கு வாலிபர் பலி
x
தினத்தந்தி 20 Oct 2019 3:45 AM IST (Updated: 20 Oct 2019 1:58 AM IST)
t-max-icont-min-icon

கழுகுமலையில் மர்ம காய்ச்சலுக்கு வாலிபர் பலியானார்.

கழுகுமலை, 

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை கறிக்கடை தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவர் கழுகுமலை கோவில் வாசல் அருகில் பூக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

இளைய மகன் முத்துமாரி (வயது21), தன்னுடைய தந்தையுடன் சேர்ந்து பூக்கடையில் பூ கட்டும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு முத்துமாரிக்கு திடீரென்று மர்ம காய்ச்சல் ஏற்பட்டது. இதற்கு அவர் கழுகுமலை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். ஆனாலும் அவருக்கு காய்ச்சல் குணமாகவில்லை.

நேற்று காலையில் வீட்டில் இருந்த முத்துமாரிக்கு திடீரென்று காய்ச்சல் அதிகமாகி, வலிப்பு நோய் ஏற்பட்டது. உடனே அவரை சிகிச்சைக்காக கழுகுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு முத்துமாரிக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே முத்துமாரி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து கழுகுமலை பகுதியில் சுகாதார பணிகளை அதிகாரிகள் தீவிரப்படுத்தி உள்ளனர். அனைத்து வார்டுகளிலும் கொசு ஒழிப்பு புகை மருந்து அடிக்கப்பட்டு, முழு தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. மர்ம காய்ச்சலுக்கு வாலிபர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

Next Story