நாங்குநேரியில் அ.தி.மு.க. வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனுக்கு ஆதரவாக அமைச்சர்கள் இறுதிக்கட்ட பிரசாரம்


நாங்குநேரியில் அ.தி.மு.க. வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனுக்கு ஆதரவாக அமைச்சர்கள் இறுதிக்கட்ட பிரசாரம்
x
தினத்தந்தி 19 Oct 2019 10:15 PM GMT (Updated: 19 Oct 2019 8:28 PM GMT)

நாங்குநேரியில் அ.தி.மு.க. வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனுக்கு ஆதரவாக அமைச்சர்கள் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

இட்டமொழி, 

நாங்குநேரி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் தொகுதி முழுவதும் கிராமம், கிராமமாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார். நேற்று அவர் தனது இறுதிக்கட்ட பிரசாரத்தை சொந்த ஊரான ரெட்டியார்பட்டியில் மேற்கொண்டார். அவர் வீடு வீடாக நடந்து சென்று, பொதுமக்களிடம் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

நான் இந்த மண்ணின் மைந்தன். உங்கள் வீட்டு பிள்ளை. கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவேன். என்னை தொகுதியில் எந்த நேரமும் சந்தித்து உங்கள் குறைகளை சொல்லலாம். உங்கள் குறைகளை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்களிடம் எடுத்துக்கூறி தீர்த்து வைப்பேன். அரசின் சிறப்பான நலத்திட்டங்களை பொதுமக்களுக்கு உடனே கிடைக்க நடவடிக்கை எடுப்பேன்.

எதிர்க்கட்சி வேட்பாளராக போட்டியிடுபவர் வெளியூர்காரர். அவரை எளிதில் நீங்கள் சந்திக்க முடியாது. கிட்டதட்ட 18 ஆண்டுகளாக எம்.எல்.ஏ.வாக இருந்தவர்களால் தொகுதி மக்களுக்கு எந்த அடிப்படை வசதியும் கிடைக்கவில்லை. இந்த முறை உள்ளூர்காரனாகிய என்னை தேர்ந்தெடுத்தால், உங்கள் தேவை அறிந்து என்னால் செயல்பட முடியும். நான் விவசாய குடும்பத்தில் பிறந்தவன். விவசாயிகளின் கஷ்டங்களை நன்கு அறிவேன். அவர்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றுவேன்.

தொகுதியில் உள்ள தொழிலாளர்களின் குறைகளை தீர்த்து வைப்பேன். இங்கு அரசிடம் பேசி தொழிற்சாலை தொடங்குவேன். படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்று தர முயற்சி செய்வேன். தொகுதி மக்களை எனது இருகண்களாக பாவித்து செயல்படுவேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து நாங்குநேரியில் வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனுக்கு ஆதரவாக அமைச்சர்கள் இறுதிக்கட்ட பிரசார கூட்டம் நடத்தினர். இந்த பிரசார கூட்டத்தில், அமைச்சர் தங்கமணி பேசும்போது, ‘இந்த தொகுதியில் 3½ ஆண்டு காலம் எம்.எல்.ஏ.வாக இருந்தவர், தற்போது எம்.பி. பதவிக்கு ஆசைப்பட்டு சென்றுவிட்டார். அவர் இந்த தொகுதி மக்களுக்கு எந்த நல்லதும் செய்யவில்லை. முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நல்லாட்சி நடத்தி வருகிறார். இந்த நல்லாட்சி தொடர நீங்கள் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்‘ என்றார்.

அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பேசும்போது, ‘காங்கிரஸ் கட்சியில் பெரிய பெரிய பணக்காரர்களுக்கு தான் பொறுப்பு கொடுத்து அழகு பார்ப்பார்கள். அ.தி.மு.க. அரசு தொடர்ந்து நீடித்து வருவதற்கு காரணம் அதன் சாதனைகள் தான். வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் சாதாரண தொண்டனாக இருந்து தற்போது எம்.எல்.ஏ. பதவிக்கு போட்டியிடுகிறார். அவர் உங்களுக்கு எந்த உதவியும் செய்வார். அவரை வெற்றி பெற செய்யுங்கள்‘ என்றார்.

கூட்டத்தில், அமைச்சர்கள் செல்லூர்ராஜூ, ஜெயக்குமார், காமராஜ், ஆர்.பி.உதயகுமார், ராஜலட்சுமி, அமைப்பு செயலாளர் மனோஜ்பாண்டியன், முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன், முன்னாள் எம்.பி. அன்வர்ராஜா, சதன் பிரபாகரன் எம்.எல்.ஏ., மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவர் ஏ.கே.சீனிவாசன், மாவட்ட செயலாளர்கள் தச்சை கணேசராஜா, கே.ஆர்.பி.பிரபாகரன், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் காபிரியேல் ராஜன், இணை செயலாளர் டென்சிங் சுவாமிதாஸ், பாளையங்கோட்டை ஒன்றிய செயலாளர் ராமசுப்பிரமணியன், நாங்குநேரி ஒன்றிய செயலாளர் விஜயகுமார், நகர செயலாளர் பரமசிவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story