நெல்லையில் பலத்த மழை சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது


நெல்லையில் பலத்த மழை சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது
x
தினத்தந்தி 20 Oct 2019 3:15 AM IST (Updated: 20 Oct 2019 1:58 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் பலத்த மழை பெய்ததால், சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

நெல்லை, 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. இதையொட்டி நெல்லை மாவட்டத்தில் கடந்த 1 வாரமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மதியம் வெயில் சுட்டெரித்தது.

மாலையில் வானம் மேகமூட்டமாக மாறி, 4.30 மணி அளவில் லேசான மழை பெய்யத் தொடங்கியது. பின்னர் ½ மணி நேரம் பலத்த மழை பெய்தது. தொடர்ந்து பலத்த மழையாகவும், லேசான மழையாகவும் பெய்து கொண்டே இருந்தது. நெல்லை மாநகரம் முழுவதும் பலத்த மழை பெய்தது.

இதனால் மாலையில் பள்ளிக்கூடம் முடிந்து வீடு திரும்பிய மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் மழையில் நனைந்தவாறு சென்றனர். தாழ்வான பகுதிகளில் தண்ணீர் குளம் போல் தேங்கியது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

தொடர் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 675 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த அணையில் இருந்து 155 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. அணை நீர்மட்டம் 107.90 அடியாக இருந்தது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 121 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 46.25 அடியாக உள்ளது. இந்த அணைக்கு 103 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருந்தது. இதே போல் கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, அடவிநயினார் கோவில், கொடுமுடியாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. தொடர் மழையால் ஏற்கனவே கருப்பாநதி, குண்டாறு ஆகிய அணைகள் நிரம்பி விட்டதால் அணைக்கு வருகிற தண்ணீர் உபரி நீராக வெளியேற்றப்படுகிறது.

நெல்லை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் வருமாறு:-

அம்பை -43, ஆய்குடி -13, நாங்குநேரி -9, பாளையங்கோட்டை -5, பாபநாசம் -7, சங்கரன்கோவில் -57, செங்கோட்டை -23, சிவகிரி -1, தென்காசி -13, நெல்லை -12,

அணை பகுதிகளில் சேர்வலாறு -10, மணிமுத்தாறு -17, கடனா -5, ராமநதி -25, கருப்பாநதி -4, குண்டாறு -22, அடவிநயினார் -6.

Next Story