ஆறுமுகநேரியில் வீடு, கோவிலில் புகுந்து நகை திருடிய முதியவர்: பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்


ஆறுமுகநேரியில் வீடு, கோவிலில் புகுந்து நகை திருடிய முதியவர்: பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்
x
தினத்தந்தி 19 Oct 2019 10:00 PM GMT (Updated: 19 Oct 2019 8:29 PM GMT)

ஆறுமுகநேரியில் வீடு, கோவிலில் புகுந்து நகை திருடிய முதியவரை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

ஆறுமுகநேரி,

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி லட்சுமிமாநகரம் திசைகாவல் தெருவைச் சேர்ந்தவர் பாஸ்கர். தனியார் நிறுவன ஊழியரான இவர் நேற்று முன்தினம் இரவில் தனது வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவில் அங்கு வந்த மர்மநபர், பாஸ்கரின் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தார். பின்னர் அவர், வீட்டில் உள்ள பீரோவை உடைத்து, அதில் இருந்த 1¼ பவுன் தங்கச்சங்கிலியை திருடி சென்றார்.

தொடர்ந்து அந்த மர்மநபர், அதே தெருவில் உள்ள உச்சிமாகாளி அம்மன் கோவிலின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தார். பின்னர் அவர், கோவிலில் அம்மனுக்கு அணிவிக்கப்பட்டு இருந்த 1½ கிராம் தங்க பொட்டு தாலியை திருடினார். அதன்பிறகு கோவிலில் இருந்த உண்டியலை உடைத்து, அதில் இருந்த பணத்தை திருடினார்.

இதற்கிடையே, கோவிலில் இருந்து சத்தம் கேட்டதால், அக்கம்பக்கத்தினர் அங்கு சென்றனர். அவர்களை பார்த்ததும், மர்மநபர் வெளியே தப்பி ஓடினார். உடனே பொதுமக்கள் விரட்டிச்சென்று, அந்த மர்மநபரை மடக்கி பிடித்து, ஆறுமுகநேரி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீசாரின் விசாரணையில், அவர் உடன்குடி நடுக்காலன்குடியிருப்பை சேர்ந்த தங்கமுத்து (வயது 60) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 1¼ பவுன் தங்கச்சங்கிலி, 1½ கிராம் தங்க பொட்டு தாலி, உண்டியல் பணம் ரூ.4 ஆயிரத்து 130 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

கைதான தங்கமுத்து மீது திருச்செந்தூர் பகுதியிலும், ஆந்திரா மாநிலத்திலும் பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளன. எனவே அவர் வேறு எங்கேனும் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டாரா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story