டெங்கு காய்ச்சலை தடுக்க புதிய முயற்சி: பள்ளி மாணவர்களுக்கு தூய்மை தூதுவர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நாகர்கோவிலில் தொடங்கியது
டெங்கு காய்ச்சலை தடுக்க புதிய முயற்சியாக பள்ளி மாணவர்களுக்கு தூய்மை தூதுவர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நாகர்கோவிலில் நேற்று தொடங்கியது.
நாகர்கோவில்,
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருந்து வருகிறது. இந்த காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் கொசுப்புழுவை ஒழிக்க தமிழக அரசும், உள்ளாட்சி நிர்வாகங்களும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
மேலும் ஒவ்ெவாரு மாவட்டத்திலும் நியமிக்கப்பட்ட கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் வீடு, வணிக நிறுவனங்கள், கடைகள் போன்றவற்றில் ஆய்வு செய்து கொசுப்புழுக்களை அழித்து வருகிறார்கள். அதே சமயத்தில் ஏடிஸ் கொசுப்புழு தொடர்ந்து உற்பத்தியாக காரணமாக இருப்பவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.
மேலும் இதுதொடர்பான விழிப்புணர்வை பள்ளி மாணவ- மாணவிகளிடையே ஏற்படுத்தவும், அந்த விழிப்புணர்வு மூலம் மாணவ- மாணவிகள் மற்ற இடங்களை சுத்தமாக வைத்து ஏடிஸ் கொசுப்புழுக்கள் உற்பத்தி ஆகாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதாவது,
பள்ளி மாணவர்களை தூய்மை தூதுவர்களாக நியமித்து அடையாள அட்டை வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த புதிய முயற்சி மூலம் விழிப்புணர்வு அதிகமாகும் என்று தமிழக அரசு எதிர்பார்க்கிறது.
அதன்படி மாவட்டந்தோறும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் 6, 7, 8, 9-ம் வகுப்பு படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு சுகாதாரத்துறை மற்றும் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் தூய்மை தூதுவருக்கான அடையாள அட்டை வழங்கும் பணி நடந்து வருகிறது. இதேபோல் குமரி மாவட்டத்திலும் வழங்கப்பட இருக்கிறது.
அந்த வகையில் நாகர்கோவில் மாநகராட்சிப் பகுதியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் மொத்தம் 70 பள்ளிகள் உள்ளன. இவற்றில் 6, 7, 8, 9-ம் வகுப்பு பயிலும் மாணவ- மாணவிகள் மொத்தம் 18 ஆயிரத்து 900 பேர் உள்ளனர். அவர்களுக்கு தூய்மை தூதுவர் அடையாள அட்டை வழங்கும் பணி நேற்று தொடங்கியது.
முதற்கட்டமாக நாகர்கோவில் டி.வி.டி. பள்ளி மாணவ- மாணவிகள் 695 பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் சிவதாணுமாலயன் தலைமை தாங்கினார். மாவட்ட பூச்சியியல் வல்லுனர் லிபி, மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் மாதவன்பிள்ளை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாநகர நகர்நல அதிகாரி கின்சால் மாணவ- மாணவிகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறுகையில், ஏடிஸ் கொசுப்புழுக்கள் உற்பத்தி ஆகாமல் இருக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்? சுற்றுப்புறங்களை தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்வது எப்படி? எந்தெந்த பொருட்களில் தேங்கி நிற்கும் தண்ணீரில் ஏடிஸ் கொசுப்புழுக்கள் உற்பத்தி ஆகும்? என்பது பற்றிய விளக்கங்களை அளித்து, மாணவ- மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மேலும் மாநகராட்சி பகுதியில் உள்ள அனைத்து பள்ளி மாணவ- மாணவிகளுக்கும் 22-ந் தேதிக்குள் தூய்மை தூதுவர் அடையாள அட்டை வழங்கப்படும் என்று தெரிவித்தார். முன்னதாக டெங்கு காய்ச்சல் தடுப்பது குறித்து உறுதிமொழியும் எடுக்கப்பட்டது.
Related Tags :
Next Story