நாகர்கோவில் அருகே இஸ்ரோ தலைவர் சிவன் படித்த அரசு பள்ளியில் தீ விபத்து -மாணவர்கள் அலறியடித்து ஓட்டம்


நாகர்கோவில் அருகே இஸ்ரோ தலைவர் சிவன் படித்த அரசு பள்ளியில் தீ விபத்து -மாணவர்கள் அலறியடித்து ஓட்டம்
x
தினத்தந்தி 20 Oct 2019 3:45 AM IST (Updated: 20 Oct 2019 2:00 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவில் அருகே இஸ்ரோ தலைவர் சிவன் படித்த அரசு பள்ளியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

நாகர்கோவில்,

நாகர்கோவில் அருகே சரக்கல்விளையில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 70 மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள்.

இந்த பள்ளியின் வளாகத்தில் தனியாக சத்துணவுக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. அதில்தான் சத்துணவு ஊழியர்கள் தினமும் மதிய உணவு தயார் செய்வது வழக்கம்.

இந்த சத்துணவுக்கூடத்தில் பெரும்பாலும் விறகு அடுப்பிலும், மழை காலங்களில் கியாஸ் அடுப்பிலும் சத்துணவு தயார் செய்வதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று கியாஸ் அடுப்பில் சத்துணவு தயார் செய்யும் பணி நடந்து கொண்டிருந்தது.

காலை சுமார் 11 மணி அளவில் சிலிண்டரின் குழாயில் கியாஸ் கசிவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து சிறிது நேரத்தில் கியாஸ் கசிவு ஏற்பட்ட குழாய் பகுதியில் குப்பென்று தீப்பிடித்தது. பின்னர் இந்த தீ மளமளவென பற்றிப்பிடித்து சிலிண்டரின் பர்னர் பகுதி வரை தீ பரவியது.

இதைப்பார்த்ததும் சமையல் செய்து கொண்டிருந்த சத்துணவு ஊழியர்கள் அலறியடித்துக்கொண்டு அந்த சத்துணவு கூடத்தைவிட்டு வெளியே ஓடிவந்தனர். இதையடுத்து ஆசிரியர்கள், மாணவர்களை பள்ளியை விட்டு அவசர, அவசரமாக வெளியேற்றினர். இதனால் மாணவர்கள் அலறியடித்து ஓடினர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் பள்ளி மாணவ-மாணவிகளின் பெற்றோரும் அப்பகுதி பொதுமக்களும் அங்கு திரண்டனர். மாணவ- மாணவிகளை அவர்களது பெற்றோர் அவசர, அவசரமாக அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.

பின்னர் திரண்டிருந்த பொதுமக்களும், ஆசிரியர்களும் சேர்ந்து சத்துணவு கூடத்தில் பற்றி எரிந்த தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அணைக்க முடியவில்லை. இதனால் அங்குள்ள பொருட்களிலும் தீப்பற்றி எரிந்தது.

இதற்கிடையே தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் நாகர்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலர் துரை தலைமையில் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மேலும் தீ பரவாமல் தடுத்து அணைத்தனர்.

இருப்பினும் சமையல் பாத்திரங்கள், சாக்குகள், சமையலறை கதவு, மின்வயர் செல்லும் குழாய்கள் போன்றவை தீயில் கருகி சேதம் அடைந்தன. தீவிபத்தின்போது கியாஸ் தீர்ந்து போனதால் கியாஸ் சிலிண்டரில் பற்றி எரிந்த தீ தானாகவே அணைந்தது. கியாஸ் அதிகமாக இருந்திருந்தால் பெருமளவில் தீவிபத்து ஏற்பட்டிருக்கும். அதிர்ஷ்டவசமாக கியாஸ் தீர்ந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இந்த சம்பவம் பற்றிய தகவல் அறிந்த அகஸ்தீஸ்வரம் தாசில்தார் அப்துல்லா மன்னான் மற்றும் அதிகாரிகள் தீ விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டனர்.

தீ விபத்து நடந்த இந்த பள்ளியில் தான் இஸ்ரோ தலைவர் சிவன் தொடக்க கல்வி பயின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தீ விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story