2-வது முறையாக அறையில் செல்போன் சிக்கியது: முருகனுக்கு வழங்கப்படும் சிறை சலுகைகளை ரத்து செய்ய ஆலோசனை- அதிகாரிகள் தகவல்


2-வது முறையாக அறையில் செல்போன் சிக்கியது: முருகனுக்கு வழங்கப்படும் சிறை சலுகைகளை ரத்து செய்ய ஆலோசனை- அதிகாரிகள் தகவல்
x
தினத்தந்தி 20 Oct 2019 4:45 AM IST (Updated: 20 Oct 2019 3:07 AM IST)
t-max-icont-min-icon

முருகன் அறையில் செல்போன் சிக்கியதால் அவருக்கு வழங்கப்படும் சிறை சலுகைகளை ரத்து செய்ய ஆலோசித்து வருவதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வேலூர், 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட முருகன் வேலூர் மத்திய சிறையிலும், அவருடைய மனைவி நளினி பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். கணவன்-மனைவி இருவரும் சுமார் 27 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை அனுபவித்து வருகின்றனர். கோர்ட்டு உத்தரவின்படி நளினி-முருகன் சந்திப்பு 15 நாட்களுக்கு ஒருமுறை நடந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் முருகன் தங்கியிருந்த அறையில் சிறைத்துறை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தினர். இதில், ஆன்ட்ராய்டு செல்போன் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதையடுத்து அதிகாரிகள் செல்போனை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து ஜெயிலர் ராஜேந்திரன் பாகாயம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் முருகன் மீது சிறையில் தடை செய்யப்பட்ட பொருளை பயன்படுத்தியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கடந்த 2017-ம் ஆண்டு முருகன் அறையில் 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்கு வேலூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் (ஜே.எம்.-1) நடந்தது. இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு, முருகன் செல்போன் பயன்படுத்தியதற்கு போதிய ஆதாரம் இல்லை என்று விடுதலை செய்தார். இந்த நிலையில் முருகன் அறையில் இருந்து 2-வது முறையாக செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது சமூக ஆர்வலர்கள், பொதுமக்களிடம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது.

குறிப்பாக சிறைத்துறையில் செய்யப்படும் சோதனையில் குறைபாடு காணப்படுகிறது என்று எண்ண தோன்றுகிறது. விசாரணை கைதியை பார்க்க செல்லும்போது உறவினர்கள் கொண்டு செல்லும் பொருட்கள் தீவிர சோதனைக்கு பின்னரே சிறைக்குள் அனுமதிக்கப்படுகிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் அடைக்கப்பட்டுள்ள கைதியை சந்திக்க செல்லும் நபரை சிறைத்துறை அதிகாரிகள் சரியாக சோதனை செய்யவில்லையா? என்ற கேள்வி எழுகிறது.

இதற்கிடையே முருகன் அறையில் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டதால் அவருக்கு வழங்கப்பட்டு வரும் சலுகைகளை ரத்து செய்ய ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து சிறைத்துறை உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் உத்தரவின்பேரில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்றும் சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

முருகனுக்கு சிறை சலுகைகள் ரத்து செய்யப்பட்டால் வக்கீல்களை தவிர பார்வையாளர்களை அவர் சந்திக்க முடியாது. மேலும் தற்போது 15 நாட்களுக்கு ஒருமுறை நடைபெறும் கணவன்-மனைவி சந்திப்பும் ரத்து செய்யப்படும்.

Next Story