குடியிருப்பு பகுதிகளில் தினமும் குப்பைகளை அகற்ற வேண்டும் - கலெக்டர் பிரபாகர் அறிவுறுத்தல்
குடியிருப்பு பகுதிகளில் தினமும் குப்பைகளை அகற்ற வேண்டும் என டெங்கு காய்ச்சல் ஒழிப்பு குறித்த ஆய்வு கூட்டத்தில் கலெக்டர் பிரபாகர் அறிவுறுத்தினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் டெங்கு காய்ச்சல் ஒழிப்பு மற்றும் சுகாதார தூய்மை பணிகள், பிளாஸ்டிக் ஒழிப்பு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் பிரபாகர் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் பிரபாகர் பேசியதாவது:- மாவட்டத்தில் 10 ஒன்றியங்களில் உள்ள அனைத்து கிராமங்கள், நகராட்சி பகுதிகள் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் டெங்கு காய்ச்சல் மற்றும் இதர நோய்களை கட்டுப்படுத்திட அனைத்து குடியிருப்பு பகுதிகளில் தினமும் குப்பைகளை அகற்றிட வேண்டும்.
கழிவு நீர் கால்வாய்களை தினமும் சுத்தம் செய்து, குடிநீர் வழங்குவதற்கு முன்னர் தவறாமல் குளோரின் கலந்தபின் வினியோகித்திட வேண்டும். டெங்கு மற்றும் காய்ச்சல் உள்ள நபர்களின் வீடுகளின் வெளிப்புறங்களை நன்றாக சுத்தம் செய்து பிளிச்சிங்பவுடர் தூவி விட்டு புகை தெளிப்பான் எந்திரங்களை தொடர்ந்து பயன்படுத்தி குடியிருப்பு பகுதிகள், காலியாக உள்ள வீட்டு மனைகள், திருமண மண்டபங்கள், அலுவலகங்கள், அங்கன்வாடி, சத்துணவு கூடங்கள் ஆகியவற்றில் புகை அடித்திட வேண்டும். கூடுதலாக ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் தலா 10 எந்திரங்கள் வாங்க வேண்டும்.
டெங்கு காய்ச்சலை தடுக்க 501 குழுக்கள் அமைக்கப்பட்டு நிலை-1, முதல் நிலை-4 வரையிலான அலுவலர்களை நியமனம் செய்யப்பட்டு தினமும் காலை 6.30 மணிக்கு குடியிருப்பு பகுதிகளுக்கு இந்த அலுவலர்கள் சென்று டெங்கு ஏடிஸ் கொசுக்கள், அதன் முட்டைகள் ஆகியவற்றினை அழிக்கும் பணியினை தொடர்ந்து செய்தல், கண்காணித்தல், மேற்பார்வையிடுதல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
குப்பைகளை ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளின் அருகில் கொட்டக்கூடாது. ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்கள் தடைசெய்யப்பட்டுள்ளது. எனவே, அதனை பயன்படுத்துபவர்கள், விற்பவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பெரியசாமி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் பிரியாராஜ், உதவி கலெக்டர் தெய்வநாயகி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் ஹரிகரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (ஊராட்சிகள்) லட்சுமணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து வேப்பனப்பள்ளி ஒன்றியம் குருபரப்பள்ளி ஊராட்சி ராகிமானப்பள்ளி கிராமத்தில் டெங்கு நோய் தடுப்பு மற்றும் சுகாதார தூய்மை பணிகளை கலெக்டர் பிரபாகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Related Tags :
Next Story