உரிய ஆவணங்கள் இன்றி படகில் வந்த இலங்கையை சேர்ந்தவர்கள் உள்பட 3 பேர் கைது
உரிய ஆவணங்கள் இன்றி படகில் வந்த இலங்கையை சேர்ந்தவர்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
வேதாரண்யம்,
நாகை மாவட்டம் வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீஸ் துணை சூப்பிரண்டு குமார், இன்ஸ்பெக்டர் ஜோதிமுத்துராமலிங்கம், சப்-இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் மற்றும் போலீசார் வேதாரண்யம் கோடியக்கரை கடலோர பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் ஒரு படகில் இருந்து இறங்கி வந்த 3 பேரை பிடித்து ஆறுகாட்டுதுறை மீனவர் கிராமத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் இலங்கை வெல்வெட்டித்துறையை சேர்ந்த அந்தோணி (வயது45), அந்தோணிமுத்து (58), கோயம்புத்தூரை சேர்ந்த பிரான்சிஸ் (39) ஆகியோர் என்பதும், இலங்கையில் இருந்து படகில் வந்த அவர்களிடம் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் இல்லை என்பதும், சட்ட விரோதமாக தமிழகத்துக்குள் ஊடுருவ முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து, படகையும் பறிமுதல் செய்தனர்.
இதுபற்றி போலீசார் நடத்திய விசாரணையில் கோயம்புத்தூரை சேர்ந்த பிரான்சிஸ் பிரான்ஸ் நாட்டுக்கு சென்று, அங்கு தன்னை இலங்கை அகதி என கூறி பதிவு செய்ததும், இதன் காரணமாக பிரான்ஸ் அதிகாரிகள் பிரான்சிசை இலங்கைக்கு அனுப்பி வைத்ததும், அதைத் தொடர்ந்து பிரான்சிஸ், இலங்கை வெல்வெட்டித் துறையை சேர்ந்த அந்தோணி, அந்தோணிமுத்து ஆகிய 2 பேரின் உதவியுடன் படகில் உரிய ஆவணங்கள் இன்றி வந்ததும் தெரியவந்தது.
பிரான்சிஸ் ஏன் பிரான்ஸ் சென்று அகதி என பதிவு செய்தார்? எதற்காக இலங்கை சென்றார்? தமிழகத்துக்கு மீண்டும் வந்ததன் நோக்கம் என்ன? என்பது பற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story