இடி, மின்னலின் போது பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - கலெக்டர் அறிவுரை
இடி, மின்னலின் போது பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கலெக்டர் கந்தசாமி அறிவுரை வழங்கியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருவண்ணாமலை,
வடகிழக்கு பருவமழையால் புயல், வெள்ளம், நிலச்சரிவு, இடி மற்றும் மின்னல் போன்ற நிகழ்வுகள் மூலம் இயற்கை பேரிடர்கள் நிகழ்கின்றன. பொதுவான இயற்கை பேரிடர்களில் இடி, மின்னலும் ஒன்று. மழை காலங்களில் இடி, மின்னல் தாக்கும் போது அதில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
மின்னல் ஏற்படும் நேரம் மற்றும் இடத்தினை முன்கூட்டியே கணிப்பது சிரமமானது. எனவே, மின்னல் ஏற்படும் போது பொதுமக்கள் வெளிப்புறங்களில் இருக்கும் போது பாதுகாப்பான கட்டிடங்களில் ஒதுங்குவது சிறந்ததாகும். கட்டிடங்கள் இல்லாத பகுதியாக இருந்தால் குகை, அகழி அல்லது பள்ளமான பகுதிகளை தேர்வு செய்து ஒதுங்க வேண்டும். காடுகளில் இருக்கும் போது இடி, மின்னல் ஏற்பட்டால் அடர்ந்த சிறிய குட்டையான மரங்கள் உள்ள பகுதியில் பாதுகாப்பாக தங்கலாம். பொதுமக்கள் முடிந்த அளவு வறண்ட பகுதிகளை தேர்வு செய்வது நல்லது.
மின்சாரத்தால் இயங்க கூடிய ஹேர் டிரையர், மின்சார ரேசர்கள், செல்போன், டெலிபோன் ஆகியவைகளை பயன்படுத்தக்கூடாது. மேலும் சிற்றுந்து அருகில் நிற்பது, சாலை செப்பனிடும் உருளை வண்டி, சரக்கு லாரி மற்றும் பெரிய இரும்பிலான வண்டிகளுக்கு அருகிலும் நிற்கக்கூடாது.
கொடி கம்பம், தொலைக்காட்சி ஆண்டனா, உயரமான குழாய்கள் அல்லது இரும்பிலான கோடரி, மண்வெட்டி, ஊஞ்சல் மற்றும் தோட்டங்களில் பயன்படுத்தப்படும் இருக்கைகள் ஆகிய உலோக பொருட்களை பயன்படுத்தக்கூடாது. இரும்பு கம்பியுடன் கூடிய குடையை கூட பயன்படுத்தக்கூடாது.
களத்துமேடு, வைக்கோல் போர், மர வண்டிகள், கண்காணிப்பு கோபுரங்கள், உயர்ந்த இடங்கள் மற்றும் தங்கும் இடங்கள் ஆகியவற்றில் இருத்தல் கூடாது. கால்நடைகளை மரத்தடியில் தங்க வைக்காமல் பாதுகாப்பான இடத்தில் வைத்து பாதுகாக்கலாம். உயரமான தனி மரங்களுக்கு கீழும், பகுதியாக மூடப்பட்ட கட்டிடங்களிலும் தஞ்சம் அடையக்கூடாது. உயரழுத்த மின் தடங்களை தாங்கி நிற்கும் கோபுரங்களுக்கு அருகில் செல்லக்கூடாது.
பொதுமக்கள் ஒதுங்குவதற்கு பாதுகாப்பான இடமானது சுவர்கள், கான்கிரீட் கூரைகள், தரைதளத்துடன் கூடிய மூடிய வீடுகள், பள்ளிகள், அலுவலகம், வணிக வளாகங்கள் ஆகும். எனவே, மின்னல் வரும் சமயங்களில் இந்த வழிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story