அன்பிற்கு அடிமையான ஆட்டின் பாசப்போராட்டம்; இறந்தவரின் உடல் அருகே இரவு முழுவதும் நின்று கொண்டிருந்த நெகிழ்ச்சி சம்பவம்


அன்பிற்கு அடிமையான ஆட்டின் பாசப்போராட்டம்; இறந்தவரின் உடல் அருகே இரவு முழுவதும் நின்று கொண்டிருந்த நெகிழ்ச்சி சம்பவம்
x

இலை, தழை கொடுத்தவர் திடீரென்று மரணமடைந்ததால் அவரது அன்பிற்கு அடிமையான ஆடு அவரது உடல் அருகே இரவு முழுவதும் நின்று கொண்டிருந்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

பெங்களூரு, 

சிக்கமகளூருவில் அரங்கேறிய இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

சிக்கமகளூரு மாவட்டம் கொப்பா டவுனில் உள்ள குவெம்பு நகரை சேர்ந்தவர் ஹுசைன் (வயது 45). மீன் வியாபாரி. இவரது பக்கத்துவீட்டை சேர்ந்தவர் ஆடு வளர்த்து வருகிறார். ஹுசைன் அந்த ஆட்டை கடந்து செல்லும் போது இலை, தழைகளை வழங்கி பாசத்துடன் அதனுடன் விளையாடி மகிழ்வதை வாடிக்கையாக வைத்திருந்தார். இதனால் அந்த ஆடு, ஹுசைனின் அன்பிற்கு அடிமையாகி அவருடன் நட்புபாராட்டி பழகி வந்தது.

இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை ஹுசைன் மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது வீட்டு முன்பு உடல் வைக்கப்பட்டு இருந்தது. உற்றார், உறவினர்கள் கூடி அழுதபடி இருந்தனர். இதை அவருடன் நட்பாக பழகி வந்த ஆடு பார்த்து, ஹுசைன் உடல் வைக்கப்பட்ட இடத்திற்கு சென்றுள்ளது. தன்னிடம் பாசம் காட்டியவர் அசைவற்று கிடப்பதை பார்த்தப்படி அங்கேயே நின்று கொண்டிருந்தது.

விடிய,விடிய ஆடு, ஹுசைன் உடல் அருகே நின்று கண்ணீர்விட்ட படி இருந்தது. இதை பார்த்த அந்தப் பகுதி மக்கள், நெகிழ்ச்சி அடைந்தனர். மறுநாள் காலை ஹுசைனின் உடல் அந்த பகுதியில் உள்ள மயானத்திற்கு அமரர் ஊர்தியில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. அப்போதும் அந்த பாசக்கார ஆடு ஊர்வலத்தில் கலந்துகொண்டு மயானம் வரை சென்றது. மேலும் மயானத்தில் வைத்து ஹுசைனின் உடல் இறுதிச்சடங்கு நடத்தி, அடக்கம் செய்யப்படும் வரை பாசப்போராட்டம் நடத்தியபடி அந்த ஆடு அங்கேயே சோகத்துடன் நின்றிருந்தது.

பின்னர் அந்த ஆட்டை, சிலர் பிடித்து அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். தற்போது இந்த பாசக்கார ஆடு, ஹுசைன் இறுதிச்சடங்கில் கலந்துகொண்ட புகைப்படம், வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி, பார்ப்பவர்களை நெகிழ்ச்சி அடைய செய்து வருகிறது.

Related Tags :
Next Story