வீர்சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கும் விவகாரம் ; மந்திரி சி.டி.ரவி- சித்தராமையா டுவிட்டரில் கடும் மோதல்


வீர்சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கும் விவகாரம் ; மந்திரி சி.டி.ரவி- சித்தராமையா டுவிட்டரில் கடும் மோதல்
x
தினத்தந்தி 20 Oct 2019 4:25 AM IST (Updated: 20 Oct 2019 4:25 AM IST)
t-max-icont-min-icon

வீர்சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கும் விவகாரத்தில் மந்திரி சி.டி.ரவி- சித்தராமையா இடையே டுவிட்டரில் கடும் மோதல் ஏற்பட்டது. இதில் குடிபோதையில் கார் விபத்து ஏற்படுத்தியவர் என்று தன்னை விமர்சித்த சித்தராமையாவுக்கு எனக்கு குடிப்பழக்கம் கிடையாது என சி.டி.ரவி பதிலடி கொடுத்துள்ளார்.

பெங்களூரு, 

மராட்டியத்தில் மீண்டும் பா.ஜனதா ஆட்சி அமைந்தால் சுதந்திர போராட்ட வீரர் வீர்சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க பரிந்துரை செய்வோம் என்று மராட்டிய மாநில பா.ஜனதா தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, “மகாத்மா காந்தி கொலைக்கு சதித்திட்டம் தீட்டியவர்களில் வீர்சாவர்க்கரும் ஒருவர். அவருக்கு எதிரான குற்றச்சாட்டில் ஆதாரங்கள் இல்லாததால், அவர் விடுதலையானார். அத்தகையவருக்கு பாரத ரத்னா விருது வழங்குவது சரியல்ல. அவருக்கு பதிலாக மறைந்த மடாதிபதி சிவக்குமார சுவாமிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்“ என்றார்.

சித்தராமையாவின் இந்த கருத்துக்கு பா.ஜனதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சுற்றுலாத்துறை மந்திரி சி.டி.ரவி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “மகாத்மா காந்தி கொலையில் வீர்சாவர்க்கர் மீது நீங்கள் (சித்தராமையா) குற்றம்சாட்டுகிறீர்கள். முதல்-மந்திரி பதவி பறிபோய்விட்டதால் சித்தராமையாவுக்கு மனநிலை கெட்டுவிட்டது. உங்களுக்கு ஏதாவது வரலாறு தெரியுமா?“ என்று குறிப்பிட்டுள்ளார்.

சி.டி.ரவியின் இந்த கருத்துக்கு முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா கடும் கண்டனம் தெரிவித்து தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “ஆட்சி அதிகாரம் இல்லாதபோது, நாள் முழுவதும் குடித்துவிட்டு போதையில் காரில் சென்று விபத்தை ஏற்படுத்தி அப்பாவிகளை கொல்கிறார்கள். என்னை போன்றவர்கள் அரசியல் பணிகளுக்கு இடையே ஓய்வு நேரத்தை ஏற்படுத்தி கொண்டு வரலாற்றை சிறிது படித்துவிட்டு பேசுகிறோம்“ என்று சித்தராமையா குறிப்பிட்டுள்ளார்.

சி.டி.ரவியின் பெயரை குறிப்பிடாமல் சித்தராமையா இந்த பதிவை அவருக்கு எதிராக வெளியிட்டுள்ளார். கூட்டணி ஆட்சியின்போது. சி.டி.ரவியின் கார் விபத்து ஏற்படுத்தியதில் ஒருவர் மரணம் அடைந்தார். சி.டி.ரவி குடிபோதையில் இருந்ததாக அப்போது தகவல்கள் பரவின. இதை அவர் அப்போது மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சித்தராமையாவின் இந்த விமர்சனத்திற்கு பதிலளித்துள்ள மந்திரி சி.டி.ரவி, “நான் பயணம் செய்த கார் விபத்தில் சிக்கியது. நான் காரை ஓட்டவில்லை. டிரைவர் தான் காரை ஓட்டினார். நான் இருக்கையில் அமர்ந்திருந்தேன். விபத்து ஏற்படும்போது, காரில் பயணிக்கும் பயணி குற்றவாளி ஆகமுடியாது. எதிர்பாராமல் விபத்து ஏற்பட்டது. அது கொலை அல்ல. எனக்கு குடிப்பழக்கம் கிடையாது. போலீசார் பதிவு செய்த வழக்கிலும் இது தெளிவாக குறிப்பிடப்பட்டு உள்ளது. சித்தராமையா ஒரு வக்கீல். உண்மையை மறைத்து பேசுவது சரியல்ல. வக்கீலாக கூட இருக்க அவர் தகுதி இல்லாதவர். எனது காரால் ஏற்பட்ட விபத்தில் மரணம் அடைந்தவரின் குடும்பத்திற்கு நிதி உதவி செய்துள்ளேன்“ என்றார்.


Next Story